Skip to content
Home » டில்லி போராட்டம்…….மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள்திரண்டதால் பதற்றம்

டில்லி போராட்டம்…….மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள்திரண்டதால் பதற்றம்

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் 2 வார காலத்திற்கு மேலாக  நீடித்து வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் கடந்த ஜனவரி 18-ந்தேதி தொடங்கிய நிலையில், 3 மாதங்களுக்கு பின்னர், மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. அவர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின்போது, சமீபத்தில் குடிபோதையில் டில்லி போலீசார் அவர்களை தாக்கினர் என்றும் அதனால், மல்யுத்த வீராங்கனையின் சகோதரர் உள்பட 2 பேர் பலத்த காயமடைந்தனர் என குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், இதனை டில்லி போலீசார் மறுத்தனர். சுப்ரீம் கோர்ட்டில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் தொடுத்த வழக்கு விசாரணையில், 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளன மற்றும் புகார் அளித்த 7 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என கூறி, அந்த வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இதுபற்றி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். போராட்டம் தொடரும். அனைத்து வாய்ப்புகளையும் வெளிப்படையாகவே நாங்கள் வைத்திருக்கிறோம். மூத்த வீரர்களிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு வருங்கால நடவடிக்கைகளை பற்றி முடிவு செய்வோம் என கூறினர்.

டில்லியில், நேற்று இரவு 7 மணியளவில், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாகவும் சென்றனர். பிரிஜ் பூஷண் சரண் சிங் 12 ஆண்டுகளாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பதவியில் இருப்பதுடன், பா.ஜ.க. எம்.பி.யாகவும் இருந்து வருகிறார். இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் டில்லி, ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இதுபற்றி டில்லி போலீசார் சமீபத்தில் கூறும்போது, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம். ஒரு சிறுமி உள்பட மொத்தம் 7 வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக புகார் அளித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை போலீசார் விரைவில் பதிவு செய்வார்கள் என கூறினர். பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது எனடில்லி போலீசார் தெரிவித்தனர்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் பி.டி. உஷா தலைமையில், மேற்பார்வை குழு ஒன்றும் மற்றும் அவர்களது போராட்டம் பற்றிய தினசரி நடவடிக்கைகளை கவனிக்கும் கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்தது. இதுபற்றி அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அரியானா, பஞ்சாப், டில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர், போராட்டம் நடைபெறும்  ஜந்தர் மந்தர் பகுதிக்கு வருகை தந்து, மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு தங்களது ஆதரவை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்திற்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரியான அனில் விஜ் சில தினங்களுக்கு முன் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அவர்கள் சார்பில், நடுநிலையாளராக செயல்பட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தனது விருப்பத்தினையும் அவர் வெளியிட்டு, அவர்களுக்கு உறுதி கூறினார். இதுதவிர, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, பாரபட்சமின்றி டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறியுள்ளார். இந்நிலையில், நாட்டில் அரியானா, பஞ்சாப், டில்லி மற்றும் உத்தர பிரதேசம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் அணி, அணியாக திரண்டு டில்லிக்கு படையெடுத்தனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாய சங்கத்தின் கீழ் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஒன்று திரண்டு உள்ளனர்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, விவசாயிகளின் ஒரு பிரிவினர்  ஜந்தர் மந்தர் பகுதிக்கு சென்றனர். தடுப்பான்கள் அமைத்த நுழைவு பகுதியில், அவசர அவசரத்துடன் சென்ற அவர்களில் சிலர் தர்ணா போராட்ட பகுதிக்கு செல்வதற்காக தடுப்பான்கள் மீது ஏறினர். இதில் தடுப்பான்கள் கீழே விழுந்தன. இதனால், அவர்கள் அதனை தூக்கி, வீசி விட்டு முன்னேறினர். அமைதியை காக்கும்படியும், சட்டத்திற்கு உட்பட்டு நடந்து கொள்ளும்படியும் பொதுமக்களிடம் கூறப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!