ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணிியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் 15வது வார்டு தேர்தல் பணிமனை திறப்பு விழா அஜந்தா நகரில் இன்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். பின்னர் தேர்தல் பணி குறித்து அங்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து 15வது வார்டில் வீடு வீடாக சென்று அப்பகுதி மக்களை சந்தித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமைச்சர் நேரு தலைமையில் இளங்கோவனுக்கு ஆதரவு திரட்டினர். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி அமைச்சர்கள் துண்டு பிரசுரங்கள் கொடுத்தனர். திமுக அரசின் சாதனைகளை சொல்லியும், திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றால் தான் தொகுதிக்கு வளர்ச்சி பணிகள் செய்ய முடியும். எனவே கை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி நேரு கேட்டுக்கொண்டார்.
இந்த வாக்குசேகரிப்பின்போது, அமைச்சர் நேருவுடன் அமைச்சர்கள் சு.முத்துசாமி, சா.மு.நாசர், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, மற்றும் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.