Skip to content
Home » வீர தீர சூரன்’ போஸ்டர் விவகாரம்…நடிகர் விக்ரம் மீது புகார்..

வீர தீர சூரன்’ போஸ்டர் விவகாரம்…நடிகர் விக்ரம் மீது புகார்..

சித்தா’ பட இயக்குனர் சு.அருண்குமார் இயக்க உள்ள விக்ரம் 62 படத்திற்கு ’வீர தீர சூரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. சினிமா துறையில் புதிய முயற்சியாக இரண்டாம் பாகத்தை முதலிலும், முதல் பாகத்தை அடுத்ததாகவும் எடுக்க உள்ளதாக திரைப்படக் குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. மேலும் யூடியூபில் ஒரு கோடி பார்வைகளை கடந்து அசத்தியது.

இந்த நிலையில் திரைப்படத்தின் மீதும், நடிகர் விக்ரம் மீதும் சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த புகாரை அளித்துள்ளார்.

’இணையத்தில் இளைஞர்கள் கத்தியை வைத்து கேக் வெட்டுவது போல் வீடியோ வெளியிடுவது, சமூக வலைதளங்களை கத்தியை வைத்துக்கொண்டு ரிலீஸ் போடுவது போன்றவற்றை பகிர்வதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே போல் சமூக வலைதளங்களில் கத்தியை வைத்து புகைப்படம் எடுத்து வேறொரு வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் பகிர்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் தற்போது ’வீர தீர சூரன்’ என்ற படத்தில், நடிகர் விக்ரம் தனது இரண்டு கையில் கத்தியை வைத்துக் கொண்டிருப்பது போன்ற போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.’

‘இது பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்லும். எனவே இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் கீழ் 326 ன்படி இந்த செயல்பாடு தவறு. இந்த பட போஸ்டர் இளைஞர்கள் மத்தியில் வன்மத்தை தூண்டும் வகையில் உள்ளதால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தவறானது. எனவே நடிகர் விக்ரம், இயக்குனர் அருண்குமார், புகைப்பட கலைஞர், ஒளிப்பதிவாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அந்த புகாரில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *