Skip to content
Home » தஞ்சையில் பூச்சிகளின் இனகவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்…

தஞ்சையில் பூச்சிகளின் இனகவர்ச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்…

  • by Senthil

காட்டுத்தோட்டத்தில் தங்கியுள்ள திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளம் அறிவியல் வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் கிழக்கு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இனக்கவர்ச்சி பொறி பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.

நெல்லில் தண்டுத் துளைப்பான் கட்டுப்படுத்துவது குறித்து இனக்கவர்ச்சி பொறியின் மூலம் செயல் விளக்கமளித்து காட்டினர். ஒரு இனத்தைச் சேர்ந்த பெண் தாய் அந்துப் பூச்சியானது அதே இனத்தைச் சேர்ந்த ஆண் அந்துப் பூச்சியைக்

கவர்ந்திழுக்க ஒருவித வாசனைப் பொருளைத் தன் உடலில் சுரந்து காற்றில் வெளிவிடும்.இது இனக்கவர்ச்சி ஊக்கி அல்லது பிரமோன் எனப்படும். அதே இனத்தைச் சேர்ந்த ஆண் பூச்சிகள் மட்டுமே இதை உணர முடியும்.

இவ்வாறு கவரப்பட்ட ஆண் பூச்சிகள் பெண் பூச்சிகளைத் தேடிச் சென்று புணர்வதால், பெண் பூச்சிகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் பயிர்களைத் தாக்கிச் சேதம் விளைவிக்கும். இவ்வாறு முட்டையிடுவதற்கு முன் இனவிருத்தியைத் தடுக்கவே இனக்கவர்ச்சிப் பொறி
பயன்படுகிறது. மேலும், ஆண் பூச்சியுடன் சேராத பெண் பூச்சிகள் கருவுறா முட்டைகளையே இடும். இதிலிருந்து புழுக்கள் வராது. இனக்கவர்ச்சி பொறிகளை எக்டருக்கு 10-12 வரையில் வைக்க வேண்டும் .

30-40 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும். சராசரியாக அன்றாடம் 3-4 மாட்டிக்கொள்ளும். பொறியில் விழும் பூச்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அவற்றின் சேதம் மற்றும் நடமாட்டத்தைக் கண்டறியலாம். பூச்சிகளைக் கண்காணிக்க என்றால் எக்டருக்கு 2 பொறிகள் போதும். ஒரு ஆண் அந்துப் பூச்சியைக் கவர்ந்து இழுப்பதன் மூலம், பெண் பூச்சியின் முட்டைகளில் இருந்து 200-300 புழுக்கள் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது. இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்துவதால் சூழல் மாசடைவதில்லை. மேலாண்மைச் செலவும் நேரமும் குறையும். முட்டையிடுவதற்கு முன்பே பூச்சிகள் அழிக்கப்படுவதால் சேதம் குறையும். காய்கறிப் பயிர்களுக்குப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தத் தேவையில்லை. இது பூச்சிக் கொல்லிகளைப் போல் அனைத்துப் பூச்சிகளையும் கொல்லாது. அந்துப்பூச்சிகளை மட்டும் கவர்வதால் நன்மை செய்யும் பூச்சிகள் வயலில் பெருகும். மற்ற பயிர்ப் பாதுகாப்பு முறைகளுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம் என்று அதன் நன்மைகளைக் கூறி செயல் விளக்கம் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!