ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவரது இளம் நண்பரும், உதவியாளரும், டாடா அலுவலகத்தின் பொது மேலாளருமான சாந்தனு நாயுடு இரங்கல் குறிப்பைப் பகிர்ந்துள்ளார்.
அதன்பின்னர் சாந்தனு நாயுடு பற்றி பல செய்திகள் வெளிவந்தன. சாந்தனு நாயுடு மே 2022-ல் இருந்துதான் ரத்தன் டாடாவுடன் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் வெகு விரைவிலேயே அவர் டாடாவின் நெருங்கிய வட்டாரத்தில் மிகவும் மதிப்புக்குரிய நபராக மாறினார். இதுதான் அவரைச் சுற்றி பல செய்திகள் வெளிவரக் காரணமாகியது.
புனேவில் பிறந்த சாந்தனு நாயுடு, சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார். தொடர்ந்து, கார்னெல் ஜான்சன் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் எம்பிஏ பட்டமும் பெற்றார்.
சாந்தனு செல்லப் பிராணிகள் மீது அன்பு கொண்டவர். சாலை விபத்துகளில் இருந்து தெரு நாய்களைப் பாதுகாக்க ஒரு திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். நாய்களுக்கு ரிஃப்ளக்டிவ் காலர்களை வடிவமைத்தார். இரவு நேரங்களில் நாய்கள் குறுக்கே வந்தால், ஓட்டுநர்களுக்கு தெளிவாகத் தெரியும்படி அந்த காலர்களை வடிவமைத்திருந்தார் சாந்தனு. அதற்கு வரவேற்பு அதிகரித்தது.
நாய்கள் மீது ஆர்வம் கொண்ட ரத்தன் டாட்டாவுக்கு சாந்தனு நாயுடு பற்றி ஒரு நியூஸ் லெட்டர் மூலம் தெரியவந்தது. இதுதான் அவரை ரத்தன் டாடாவுக்கு அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு, ரத்தன் டாடாவும் சாந்தனு நாயுடுவும் சந்தித்தனர். அன்றிலிருந்து இருவருக்கும் நட்பு உருவானது. பின்னர் சாந்தனு எம்பிஏ முடித்தார். டாடாவின் அலுவலகத்தில் பொது மேலாளராக பணிபுரியும் வாய்ப்பையும் டாடா அவருக்கு வழங்கினார். ரத்தன் டாடா செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்ற துணையாக அவரை அழைத்துச் சென்று, அவருக்கு வேண்டியதைச் செய்து வந்தார் சாந்தனு நாயுடு.