சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில், 10 தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2023ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதினை ரணியன் நா.கு.பொன்னுசாமிக்கு, 2022ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதினை தஞ்சை முன்னாள் அமைச்சர் .நா.மீ. உபயதுல்லாவிற்கும், பெருந்தலைவர் காமராசர் விருதினை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், மகாகவி பாரதியார் விருதினை முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதினை வாலாஜா வல்லவனுக்கும், திரு.வி.க. விருதினை நாமக்கல் பொ. வேல்சாமிக்கும், கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை கவிஞர் மு.மேத்தாவுக்கும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தேவநேயப்பாவாணர் விருதினை முனைவர் இரா. மதிவாணனுக்கும் வழங்கினார். இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை, தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
இந்த விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.