பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட் டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (65). அரிசி ஆலை வைத்து நடத்தி வந்தார். இவரது மகன் சக்திவேல்(36). அப்பா-மகன் இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி குழந்தைவேலை சரமாரி தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த குழந்தைவேல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைகளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் தந்தை மகன் இடையே சமாதானம் ஏற்பட்டு வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி குழந்தைவேல் வீட்டில் திடீரென இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்கு
பதிவு செய்து இயற்கை மரணமா என விசாரணை நடத்தினர். இந்நிலையில் சக்திவேல் தனது அப்பாவை ஏற்கெனவே தாக்கிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் தந்தையை இரத்தம் சட்டையெல்லாம் கொட்டியும் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் இது போல் தாக்கும் மகன்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் எதிர்ப்பும், ஆதங்கமும் தெரிவித்து வருகின்றனர்.