Skip to content
Home » பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்

பெரம்பலூர்…. சினிமா வில்லன் போல தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்….. பகீர் தகவல்கள்

  • by Authour

பெரம்பலூர் அருகே  உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  குழந்தைவேல்(68),  வேல்முருகன் மாடர்ன் ரைஸ் மில்  என்ற  அரிசி ஆலையை நடத்தி வந்தார்.  இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மகன்  சக்திவேல் என்கிற சந்தோஷ்  எம்.பி.ஏ. படித்தவர். இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே   ஜவ்வரிசி ஆலை நடத்தி வந்தார். தற்போது அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்  தந்தையிடம்  பணம் கேட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளார்.

ஏற்கனவே  குழந்தைவேலுவும், அவரது மனைவியும்  சரியாக பேசிக்கொள்வதில்லையாம். அதே நேரத்தில்  குழந்தைவேலுவின் மனைவி மகன் சக்திவேலுவுக்கு ஆதரவாக  இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் குழந்தைவேலுவுக்கும், மகன்  சக்திவேலுவுக்கும்   நல்ல உறவு இல்லை.

எனவே தான் அவர் மகனுக்கு உதவி செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது.  குழந்தைவேலுக்கு  ரைஸ் மில் தவிர  அதிக அளவில் விவசாய நிலங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.  அதை  தரும்படி கேட்டு   சக்திவேலு  தகராறு செய்து வந்த நிலையில்  தான் கடந்த பிப்ரவரி 16ம் தேதி  தந்தையை சினிமா வில்லன் போல மகன்  சரமாரியாக தாக்கி உள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட தந்தையை இரு கைகளாலும், காலாலும் தாக்கினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து,  குழந்தைவேலுவை காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது மருத்துவமனைக்கு செல்ல விடாமலும் தாக்குதலை தொடர்ந்தார்.

இது தொடர்பாக  குழந்தைவேலுவும், அவரது  தந்தை அத்தியப்ப கவுண்டரும்(93)  கை களத்தூர் போலீசில் புகார் செய்தனர்.  பின்னர்  உறவுக்காரர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க  புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.  இந்த நிலையில்  தொடர்ந்து சொத்தை கேட்டு  மகனின் டார்ச்சர் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி காலை  வெகுநேரமாகியும் குழந்தைவேலு எழும்பி  வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.

எனவே அவரது படுக்கையறைக்கு சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தார்.  உடனடியாக அக்கம் பக்கத்தினர் மற்றும்  அத்தியப்ப கவுண்டர் ஆகியோர் கைகளத்தூர் போலீசில் புகார் செய்தனர்.  போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி  பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டது.  அவர் மனவேதனையில்  தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது ஏற்கனவே  மகன்  சக்திவேல் தாக்கியதால் ஏற்பட்ட உள்காயங்களால் அவர் இறக்க நேரிட்டதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

இந்த நிலையில் குழந்தைவேலுவை அவரது மகன் சக்திவேல்  கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகளை சிலா்   சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து போலீசார்  உஷாரானார்கள்.  இந்த வழக்கில் ஏன் சரியான விசாரணை நடத்தப்படவில்லை என  கைகளத்தூர் எஸ்ஐ பழனிசாமிக்கு  மாவட்ட எஸ்.பி.  விளக்கம் கேட்டு உள்ளார். அதன் பேரில் எஸ்.ஐ. மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவை பார்த்த பெரம்பலூர் எஸ்.பி. இந்த வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் கைகளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி சக்திவேலை கைது  செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

341 தடுத்து தாக்குதல்

294(b) தகாத வார்த்தைகளால் திட்டுதல்

323 கைகளால் அடித்தல்

324 ஆயுதங்களால் தாக்குதல்

506(1) ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு

கொலை மிரட்டல் விடுத்தல்

தந்தையை , மகனே கொடூரமாக தாக்கும் வீடியோ  சமூக வலைதளங்களில்  வைரலாகி வருவதால் அதை பார்க்கும் மக்கள் அத்ர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *