Skip to content
Home » சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகள்…முதல்வர் உத்தரவு…

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 42 பணிகள்…முதல்வர் உத்தரவு…

சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் மேலும் பூங்காக்கள் அமைத்தல், விளையாட்டுத் திடல்கள், மயானபூமிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள், 2 மயானபூமிகள், 16 பள்ளிக் கூட்டடங்கள் மற்றும் புரதான சின்னமான விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளித்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் என 42 திட்டப்பணிகளுக்கு ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். சிறந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையிலும் மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்துகின்ற வகையிலும் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. கூழாங்கற்களுடன் கூடிய 8 வடிவிலான பாதை, யோகா செய்யுமிடம், அமரும் இருக்கைகள், கிரில் மற்றும் புதுமையான ஓவியங்களுடன் கூடிய சுவர், கழிப்பறைகளுடன் கூடிய பாதுகாப்பு அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்டுள்ளதாக பூங்காக்கள் அமையும். கால்பந்து, பூப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் உள்ளிட்ட இளைஞர்கள் பங்கேற்று தங்கள் வாழ்வில் வெற்றி பெறுவற்கான பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் விளையாட்டுத் திடல்கள் அமையும்.

செயற்கை குளம் மற்றும் மழைத்தோட்டங்களுடன் கடற்பாசி பூங்கா அமையும் இதன் மூலம் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்துப் போராடவும், மழைநீரை நிலத்தில் செலுத்துவதின் மூலம் நிலத்தடிநீரை சேமித்திடவும் கடற்பாசி பூங்காக்கள் வாய்ப்பாக அமையும். எரிபொருள் தகனத்தை எல். பி. ஜி தகனமாக அமைத்தல், தேவையான அடிப்படை வசதிப் பணிகள் மேற்கொள்ளுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை அமைப்புகளுடன் உருவாக்குதல், நவீன வசதிகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிப்பு ஏற்பாடுகள், நினைவுக்கூடங்கள், தியான அறைகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமையும். சிறந்த கற்றல் சூழல் மேம்படுத்தப்பட்ட வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் பள்ளிக் கட்டிடங்கள் அமையும். விக்டோரியா பொது மண்டபத்தினைப் பாதுகாத்து புத்துயிர் அளித்திடும் வகையில் புனரமைத்து பாரம்பரிய சின்னத்தைப் பாதுகாத்தல் திட்டமாகும். இதில் தரைத்தளமானது நிரந்தரமான மற்றும் சுழல் கண்காட்சி அருங்காட்சியமாக மாற்றப்பட உள்ளது.

3 பக்க காட்சியகங்கள், பார்வைக்கூடம் மற்றும் ஒரு அரைவட்ட காட்சியகம் அமையும். தரைத்தளத்தில் தனி நுழைவாயிலுடன் அருங்காட்சியகத்தின் அலுவலகம் அமையும். மேலும் அருங்காட்சியகத்தை ஒட்டி தேநீர் கூடமும் அமையும். முதல் தளத்தில் அருங்காட்சியகத்தின் பார்வைக் கூடத்தின் தொடர்ச்சியில் ஒரு ஓய்வு அறை, முக்கியப் பிரமுகர்களுக்கான கூடம் மற்றும் பல்நோக்குப் பயன்பாட்டிற்கான மண்டபம் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமையும். வெளிப்புற வளாகத்தில் சிறிய பசுமைப் புல்வெளித் தோட்டம், வெளிப்புற அருங்காட்சியகம் மற்றும் செயல்திறன் அரங்கிற்கான ஏற்பாடுகள் உருவாக்கப்படும். கூடுதலாக முகப்பில் ஒளிரூட்டும் வெளிச்சத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!