Skip to content
Home » ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட்டிடம் ரூ.96 கோடி மோசடி

ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட்டிடம் ரூ.96 கோடி மோசடி

ஜமைக்காவில் பிறந்து உலகமே வியந்து பார்க்கும்  அளவுக்கு ஓட்டத்தில் சாதனை செய்தவர் மின்னல் வேக ஓட்டக்காரர் உசேன் போல்ட். பத்து வினாடிக்குள் 100 மீட்டர் தொலைவை கடந்து சாதனை புரிந்தவர். ஒலிம்பிக்கில் போல்ட் எட்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே வீரரும் இவர்தான். 2009ல் பெர்லினில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார் உசைன் போல்ட். இந்த சாதனை இன்றுவரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. 11 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற போல்ட் 2017-ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். எனினும் தற்போதுவரை உலகின் அதிவேக மனிதர் என்றே அழைக்கப்படுகிறார். இவர் போட்டிகளில் வென்றதன் மூலமும், விளம்பரம் மூலமும் உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரராக திகழ்ந்து வருகிறார். அப்படி தனக்கு வந்த தொகையை உசேன் போல்ட் கிங்ஸ்டனை தளமாகக் கொண்ட ஸ்டாக்ஸ் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிடெட் என்ற முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில், அந்த முதலீட்டு நிறுவனத்தில் தனது கணக்கில் இருந்து உசேன் போல்ட் 12 மில்லியன் டாலரை இழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர் ஒருவரின் மோசடியால் முதலீட்டாளர்களின் பணம் பாதிக்கப்பட்டதாகவும், உசேன் போல்ட் 12 மில்லியன் டாலரை ( இந்திய மதிப்பில் ரூ.96 கோடி) இழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய உசேன் போல்ட்டின் வழக்கறிஞர் தற்போது வெறும் உசேன் போல்ட் கணக்கில் 12,000 டாலர் மட்டுமே இருக்கிறது. அவர் தற்போது இழந்திருக்கும் தொகை அவருடைய வாழ்நாள் சேமிப்பாகும். நிறுவனம் நிதியைத் திருப்பித் தராவிட்டால், நாங்கள் இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம்” என்று கூறியுள்ளார். செவ்வாயன்று, ஜமைக்காவின் நிதிச் சேவைகள் ஆணையம் எஸ்எஸ்எல் இன் தற்காலிக நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறியது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!