ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரின் துணை கலெக்டராக இருந்தவர் பிரியங்கா பிஷ்னோய்,(33). இவருக்கு சமீபத்தில் ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்பப்பை அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் இவரின் உடல்நிலை மோசமானதால், மேல்சிகிச்சைக்காக குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு கோமா நிலைக்குச் சென்ற அவர், நேற்று உயிரிழந்தார். ஜோத்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் தான், பிரியங்கா உயிரிழந்தார் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பிஷ்னோய் சமுதாய மக்களும் பங்கேற்றனர். மருத்துவமனை நிர்வாகம் மீது விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதும், அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து துணை கலெக்டர் இறப்பு குறித்து விசாரிக்க ஐந்து நபர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து ஜோத்பூர் கலெக்டர் உத்தரவிட்டார்.