Skip to content
Home » காஷ்மீரில் நடந்து செல்ல பா.ஜ.க. பயப்படுகிறது….யாத்திரை நிறைவில் ராகுல் பேச்சு

காஷ்மீரில் நடந்து செல்ல பா.ஜ.க. பயப்படுகிறது….யாத்திரை நிறைவில் ராகுல் பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு-காஷ்மீரில் முடிவடைந்தது. மொத்தமாக 136 நாட்கள் நடைபெற்ற இந்த பாத யாத்திரை காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று நிறைவடைந்தது. பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியாக ஸ்ரீநகரில் உள்ள ஷெர் – ஐ – காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்  ராகுல்காந்தி பேசியதாவது:

எனக்காகவோ, காங்கிரஸ் கட்சிக்காகவோ இந்த யாத்திரையை  நான் மேற்கொள்ளவில்லை… நாட்டு மக்களுக்காக மேற்கொண்டேன். இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதே எங்கள் நோக்கம். இந்தியாவின் தாராளவாத, மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம்.

எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கொடுக்கப்பட்டபோது ஏற்பட்ட , அந்த வலி வன்முறை தூண்டுபவர்களுக்கு ஒருபோதும் புரியாது . வன்முறையை தூண்டும் மோடி, அமித் ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது. ராணுவ வீரனின் குடும்பத்தினருக்கு அந்த வலி புரியும். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு புரியும். ஒருவருக்கு அதுபோன்ற செல்போன் அழைப்பு வருபோது ஏற்படும் வலியை காஷ்மீரிகள் புரிந்துகொள்வார்கள்.

இந்த யாத்திரையின் நோக்கம் என்னவென்றால் ஒருவரின் அன்பானவனரின் உயிரிழப்பை தொலைபேசி அழைப்பு மூலம் அறிவிப்பதற்கு முடிவு கட்டுவதேயாகும்.. அது ராணுவ வீரராக இருந்தாலும், சிஆர்பிஎப் வீரராக இருந்தாலும் அல்லது எந்த ஒரு காஷ்மீரியாக இருந்தாலும் சரி. ஜம்மு-காஷ்மீரில் பாஜக தலைவர்கள் யாரும் இவ்வாறு நடந்து வர முடியாது என்பதை நான் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன். அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள், இவ்வாறு நடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதல்ல மாறாக அவர்கள் பயப்படுகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் பாதயாத்திரை சென்றால் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று எனக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

நான் இது குறித்து யோசித்தேன்.. பின்னர், எனது வீடான ஜம்மு காஷ்மீரில் எனது மக்களுடன் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது வெள்ளை சட்டையை சிவப்பு நிறமாக மாற்ற அவர்களுக்கு ( எனது எதிரிகளுக்கு ) ஏன் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று நினைத்தேன். காஷ்மீர் மக்கள் எனது கையில் கையெறி குண்டை கொடுக்கவில்லை, மாறாக மிகுந்த அன்புடன் அவர்களது  இதயத்தை கொடுத்துள்ளனர்’ என்றார்.

ராகுலின் உருக்கமான பேச்சு காஷ்மீர் மக்களைவெகுவாக கவர்ந்தது. கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர். திமுக சார்பில்  திருச்சி சிவா இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!