Skip to content
Home » தஞ்சையில் பொங்கல் கலைவிழா

தஞ்சையில் பொங்கல் கலைவிழா

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள தர்பார் கூடத்தில் தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் பொங்கல் விழா மரபுசார் இரு நாள் கலை நிகழ்ச்சி தொடங்கியது.

தொடக்க விழாவுக்கு தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக ஆளுமை குழு ஆயுள் கால உறுப்பினர் து. சிவாஜி ராஜா போன்ஸ்லே தலைமை வகித்து பேசுகையில், தமிழர் திருநாளான பொங்கல் விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பொங்கல் திருவிழா நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் வழிபடும் விதமாகக் கொண்டாடுகிறோம். இந்து, தமிழர்களின் பண்பாட்டில் ஒவ்வொரு பண்டிகைக்கும் அர்த்தங்கள் இருக்கின்றன என்றார்.

பின்னர், சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி. மாறன் பேசுகையில், தமிழர் திருநாளான பொங்கல் விழா மதம், இனம் கடந்து அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது. தனுர் ராசியிலிருந்து, மகர ராசிக்கு சூரியன் இடம்பெயர்வதையே பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகிறோம். இத்திருநாளில்தான் வானியல் கூறுகள் அதிமாகச் சங்கமிப்பதால், நம் முன்னோர்கள் கொண்டாடியுள்ளனர் என்றார்.

தஞ்சாவூர் கலைக்கூடம் காப்பாட்சியர் சிவக்குமார் மற்றும் பலர் பேசினர். இதையடுத்து, சிறப்பு விருந்தினர்களை தொல்லியல் துறை தஞ்சாவூர் மாவட்டதொல்லியல் அலுவலர் த. தங்கதுரை கௌரவித்தார். தொல்லியல் அலுவலர் சு.மூ. உமையாள் வரவேற்றார். தொல்லியல் அலுவலர் அ. சாய்பிரியா நன்றி கூறினார்.

இதை தொடர்ந்து கரகாட்டம், காவடியாட்டம், பிற்பகலில், தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை நாதம், தப்பாட்டம், கரகம், களியாட்டம், கருப்புசாமியாட்டம், புலியாட்டம், பிற்பகலில் மேளம், நாதம், கரகாட்டம், நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது. இன்று காணும் பொங்கலை ஒட்டி பெரியகோவில், அரண்மனை உட்பட பல இடங்களுக்கு வருகை புரிந்த சுற்றுலாப்பயணிகள் இந்த நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!