Skip to content
Home » பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

பாகிஸ்தானில் 1 கிலோ அரிசி ரூ.335…. பொருளாதார நெருக்கடி…. மக்கள் அவதி

  • by Senthil

இலங்கையில் கடந்த ஆண்டு மத்தியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அது நாடு முழுவதும் எதிரொலித்தது. இந்தியா உள்பட அண்டை நாடுகளின் உதவியால் அதில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. இந்நிலையில், மற்றொரு ஆசிய நாடான பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில்  கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 20 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இந்த சூழலில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களால் அந்நாட்டு மக்கள் பரிதாப நிலையில் உள்ளனர். புது வருடம் தொடங்கிய பின்பு, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்த கூடிய ரொட்டி, பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்தது.

பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியுடன், கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. எரிசக்தி துறையில் ஏற்பட்ட பாதிப்பால், எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாலும் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, அமெரிக்கா, சவூதி அரேபியா மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் கேட்டு உள்ளது.

எனினும், அதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.  சர்வதேச நாணய நிதியத்திடமும் (ஐ.எம்.எப்.) கடன் வாங்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது. இதற்காக சி.டி.எம்.பி. எனப்படும் கடன் மேலாண் திட்டம் ஒன்றை வகுத்து அதனை ஐ.எம்.எப்.க்கு அனுப்பியது. ஆனால், அதனை ஆய்வு செய்த அந்த அமைப்பு அத்திட்டத்தினை ஏற்காமல் நிராகரித்து விட்டது.

இதனால், பொருளாதார சிக்கலில் இருக்கும் அந்நாட்டின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்து அது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்றி உள்ளது. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியிலும் இது எதிரொலித்த நிலையில், ரம்ஜான் மாதத்தில் மீண்டும் விலைவாசி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளது. இதன்படி, ஒரு கிலோ அரிசி விலை ரூ.70-ல் இருந்து ரூ.335 ஆக உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது என ஜியோ நியூஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவித்து உள்ளது.

பழங்களின் விலையும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. இனிப்பு ஆரஞ்சு ஒரு டஜன் ரூ.440, ஆரஞ்சு ஒரு டஜன் ரூ.400, வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.300 என விலை உயர்ந்து உள்ளது. மாதுளை பழம் ஒரு கிலோ ரூ.440, ஈரான் ஆப்பிள் ஒரு கிலோ ரூ.340, கொய்யா பழம் ஒரு கிலோ ரூ.350, ஸ்டிராபெர்ரி பழம் ஒரு கிலோ ரூ.280 என விலை உயர்ந்து காணப்படுகிறது.

இதேபோன்று, இறைச்சி விலையும் அதிகரித்து உள்ளது. முன்பு ஒரு கிலோ ரூ.700 என இருந்த இறைச்சி விலை ரூ.1,000 வரை உயர்ந்து உள்ளது. மட்டன் விலையும் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,800 வரை உயர்ந்து உள்ளது. அரசு நிர்ணயித்து உள்ள விலைவாசி எங்களுக்கு ஒத்து வராது என சந்தை வணிகர்கள் கூறுகின்றனர். அதிகரித்து வரும் உணவு பணவீக்கம் ஆகியவற்றால் நடப்பு ஆண்டில் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இந்த விலைவாசி உயர்வால், ஏழை மக்களால் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!