Skip to content
Home » ஆன்லைன் ரம்மி தடை சட்டம்,….கெஜட்டில் வெளியீடு…தண்டனை விவரம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்,….கெஜட்டில் வெளியீடு…தண்டனை விவரம்

  • by Senthil

தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.   4 மாதங்களில் கிடப்பில் போட்டிருந்த மசோதாவை  கவர்னர்  திருப்பி அனுப்பியதால்  கடந்த 23-ந் தேதி சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை மு.க.ஸ்டாலின் மீண்டும் பேரவையில் தாக்கல் செய்தார்.

24-ந் தேதியன்று அதாவது மறுநாளே இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு மீண்டும் அனுப்பிவைத்தது. இந்த முறையாவது கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துவிடுவார் என்று தமிழக மக்கள் மிகவும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர். இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவனர்னருக்கு எதிராக நேற்று காலை அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளான நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி நேற்று மாலை ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த சட்டம் நடைமுறைக்கு வருவதால் விதிக்கப்படும் தண்டனைகள் விவரம் வருமாறு:

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!