Skip to content
Home » தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

தற்போதைய கொரோனா 4வது அலையாக கருதமுடியாது… அமைச்சர் மா.சு.

  • by Senthil

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவது குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பொது இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும் முகக்கவசம் அணிவதில் அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் எனவும் கொரோனா பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த தீர்மானத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமில்லை, பிற மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் தீவிரமாக இல்லை; அதனால் பெரிய அளவிலான பதற்றமான சூழல் இல்லை. புதிய கொரோனா வைரஸ் லேசான அளவிலான பாதிப்பையே ஏற்படுத்துகிறது.

கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது. கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை என்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கூடி கொண்டிருப்பதால், இதனை 4-வது அலையாக கருத முடியாது. கொரோனா தொற்று அதிகரித்தால் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும்.

தற்போது வந்திருக்கும் கொரோனா பாதிப்பு உயிர் பறிக்கும் பாதிப்பாக இல்லை. காய்ச்சல், தொண்டை வலி ஆகியவை ஏற்படுகிறது, இதனால் ஆக்சிஜன் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தேவைப்படவில்லை. பொதுமக்கள் முககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஆனால் கட்டாயப்படுத்தவில்லை. ஏப்ரல் 1-ம் தேதி முதல் மருத்துவமனைகளில் முககவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் எப்படி உருமாறி வந்தாலும் தமிழக மக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காப்பார். 2,067 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பை வைத்து கொள்ளும் அளவிற்கு தமிழகத்தில் வசதிகள் உள்ளன. அரசின் விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். தமிழகத்தில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு பாராட்டியுள்ளது. 24 மணி நேரத்தில் 1.4 லட்சம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் வசதி வாய்ப்புகள் நம்மிடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!