Skip to content
Home » கேரளாவில் செல்பி எடுத்தபோது……. 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த மணமகள்

கேரளாவில் செல்பி எடுத்தபோது……. 150 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த மணமகள்

  • by Senthil

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (வயது 25). இவருக்கும், கல்லுவாதுக்கலையை சேர்ந்த சாந்திராவிற்கும் (19) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களுக்கு நேற்று அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.  திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் மணமக்கள் இருவரும் காலையில் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

அதன்பின்னர் பகல் 11 மணியளவில் பாரிப் பள்ளி வேளமானூர் காட்டுப்புரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர். அந்த குவாரியில் 150 அடி உயரத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளித்தது. அந்த இடத்தை பார்த்ததும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள்.

இருவரும் குவாரியின் மேல் பகுதியில் நின்றவாறு செல்பி எடுத்தனர். அப்போது திடீரென்று சாந்தி்ரா கால் வழுக்கி 150 அடி உயரத்தில் இருந்து குவாரியில் தேங்கிநின்ற தண்ணீருக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தார். இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட வினு கிருஷ்ணன் உடனடியாக குவாரியில் இருந்த தண்ணீருக்குள் குதித்தார். பின்னர் தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்த தனது வருங்கால மனைவி சாந்திராவை காப்பாற்றினார். சாந்திராவின் உடையை பிடித்து இழுத்து பாறையின் ஒரு பகுதிக்கு வினு கிருஷ்ணா கொண்டு வந்தார். அதனைத்தொடர்ந்து இருவரும் குவாரி பாறையை பிடித்துக்கொண்டு காப்பாற்றுங்கள்…காப்பாற்றுங்கள்.. என்று சத்தம் போட்டனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் ரப்பர் வெட்டும் பணி செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து கயிற்றை இறக்கி பாதுகாப்பாக பிடித்து கொள்ளுமாறு கூறினர். பின்னர் குழாய் மூலம் கட்டப்பட்ட சிறு தோணியில் தொழிலாளர்கள் இறங்கி இருவரின் அருகே சென்று முதலுதவி செய்தனர். இதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். லேசான காயங்களுடன் இருவரும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக நேற்று நடைபெறுவதாக இருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. துபாயில் பணி செய்துவரும் வினு கிருஷ்ணன் திருமணத்திற்காக 2 வாரங்களுக்கு முன்னர் தான் சொந்த ஊருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவை மிஞ்சும் சம்பவமாக டூப் இல்லாமல், வாலிபர் தனது வருங்கால மனைவியை 150 உயரத்தில் இருந்து பாறைக்குழிக்குள் குதித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!