Skip to content
Home » நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி..

நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி..

மத்திய அரசின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திரா சங்கத்தான் அமைப்பின் சார்பில் 14வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 200 பேரும், பாரதியார் பல்கலைக்கழகம் உட்பட கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு தங்களது கலாச்சாரங்களை பரிமாறும் விதத்திலான பல்வேறு நிகழ்ச்சிகள், அடுத்த 7 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு நிகழ்வினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார், மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன், பெங்களூர் நேருயுவகேந்திரா மண்டல இயக்குனர் நட்ராஜ், மாநில இயக்குனர் செந்தில்குமார், திருச்சிராப்பள்ளி டிஎஸ்பி லில்லி கிரேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது,‘வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என பல்வேறு சிறப்புகளை கொண்டது.
யாதும் ஊரை யாவரும் கேளிர் என்பது தமிழர்களின் பண்பாடு.

இந்த ஊர் உங்கள் ஊர். இங்குள்ளவர்கள் உங்கள் உறவினர்கள் என இந்த ஏழு நாட்களையும் பயனுள்ள வகையில் உபயோகிக்க வேண்டும் என பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவர்களிடம் கேட்டுகொள்கிறேன்.

இந்நிகழ்வில் அமைச்சர் தலைமையில் 14வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் கையேடு வெளியிடப்பட்டதோடு, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த மாணவர்கள் அமைச்சரோடு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வினை அடுத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்,‘தமிழக முதல்வர் அனைவரையும் ஒருங்கிணைத்த வளர்ச்சியை முன்னிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.நேரு யுவகேந்திராவின் இந்த நிகழ்ச்சி பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் அவர்களது ஆளுமை திறனை வளர்ப்பதற்கும் பல்வேறு கலாச்சாரங்களை தெரிந்து கொள்வதற்கும் அவர்களது அரசியல் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் இந்நிகழ்ச்சி பெரிதும் உதவும்.

அரசின் அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இணையதள சேவையை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் நவீன புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கான தொழில் நுட்ப உதவிகளையும் செய்து வருகிறோம். பழங்குடியினர் விவசாயிகள் உட்பட சாதாரண மனிதர்களிடம் தொழில்நுட்பத்தை கொண்டு செல்லும் வகையில் முதல்வரின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.ஆன்லைன் ரம்மி பல உயிர்களை பறித்து பல குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்துள்ளது. எனவே அதனை தடை செய்யும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்றி ஆளுநரிடம் அனுப்பியது. அதை அனுமதிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. அதை செய்யாமல் குழப்பும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல. மக்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!