Skip to content
Home » அரியானா…….தொழிலதிபரை மிரட்டி ரூ.80 லட்சம் பறித்த பெண் யூ டியூபர் கைது

அரியானா…….தொழிலதிபரை மிரட்டி ரூ.80 லட்சம் பறித்த பெண் யூ டியூபர் கைது

  • by Senthil

தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி கற்பழிப்பு வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி பணம் பறித்ததாக பிரபல யூடியூபர் நம்ரா காதிரை(22) போலீசார் கைது செய்து உள்ளனர். அவரது கணவரை தேடிவருகிறார்கள். நம்ரா காதர் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர். யூடியூப்பில் அவருக்கு 6 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர்.இன்ஸ்டாகிராமிலும் அவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் விளம்பர நிறுவனத்தை நடத்தி வரும் பாட்ஷாபூரைச் சேர்ந்த தினேஷ் யாதவ் (21) என்ற தொழில் அதிபர் ஒருவர் நம்ரா காதர் மற்றும் அவர் கணவர் விராட் பெனிவால் மீதும் அரியானா மாநிலம்  குருகிராமில் உள்ள செக்டார்-50 போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

புகாரில் அவர் கூறி இருப்பதாவது;- ஒரு ஓட்டலில் நம்ரா காதர் என்ற பெண்ணை வேலை தொடர்பாக சந்தித்தேன். அவர் ஒரு யூடியூபர், அவருடைய வீடியோவை நான் பார்த்திருக்கிறேன். யூடியூபராகவும் அவருடைய நண்பராகவும் இருக்கும் விராட் பைனிவாலையும் அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் தனது நிறுவனத்தில் வேலை செய்வதாகச் சொல்லிவிட்டு இரண்டு லட்சம் முன்பணம் கேட்டார்.

நம்ராவை எனக்கு கொஞ்ச நாளாகத் தெரியும் என்பதால் ஒரே நாளில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தேன். பின்னர், நான் அவரிடம் விளம்பரப் பணிகள் குறித்து விளக்கியபோது, ​​அவர் மேலும் ரூ. 50,000 கேட்டார். அதை நான் அவருடைய கணக்கில் போட்டேன். அதன் பிறகு அவர் என் வேலையைச் செய்யவில்லை. நம்ரா என்னை விரும்புவதாகவும் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார். அவர் தங்கையின் திருமணத்திற்குப் பிறகு என் பணத்தை திருப்பித் தருவதாக கூறினார்.

எனக்கும் அவரை பிடித்திருந்தது, நாங்கள் ஒன்றாகச்  சுற்ற ஆரம்பித்தோம். விராட் எப்போதும் நம்ராவுடனே இருந்தார். ஒரு நாள் நாங்கள் ஒரு கிளப் பார்ட்டிக்கு சென்றிருந்தபோது, ​​நம்ராவும் விராட்டும் என்னை மது குடிக்க வற்புறுத்தினர். பின்னர் நாங்கள் மூவரும் ஓட்டலில் ரூம் போட்டு தூங்கினோம். காலையில் எழுந்ததும் நம்ரா என்னிடம் பணம் கேட்டார். நான் மறுத்தால் பலாத்கார வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டினார். நான் பயந்து, நான் எந்த தவறும் செய்யவில்லை என்று வேண்டுகோள் விடுத்தேன். பின்னர் விராட் பானிவாலும் என்னை மிரட்டினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, நான் அவருக்குக் கீழ்ப்படிந்து இதுவரை 70-80 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன் என்னை நம்பவைத்து ஏமாற்றி விட்டனர் என கூறி உள்ளார். தற்போது நம்ரா காதிரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், தலைமறைவான விராட் பெனிவாலை போலீசார் தேடிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!