திருமருகல் மற்றும் கீழ்வேலூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தேர்தல் நெருங்கி விட்டதால் நாகை மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்காக நாகை மாவட்டத்தில் உள்ள 3
சட்டமன்ற தொகுதியில் தலா 1 சட்டமன்ற தொகுதிக்கு 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட வாகனங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்றால் அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் திருமருகல் அருகே சேஷமூலை சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் அந்துவன்சேரல் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வழியாக சந்தேகத்தின் பேரில் வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் கணபதிபுரத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் விழுதியூரில் இருந்து உரிய ஆவணங்களும் இன்றி ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்தத் தொகையை நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து நாகை தலைமையிடத்து துணை தாசில்தார் தனஜெயனிடம் ஒப்படைத்தனர்.இதைப்போல் கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வேளாங்கண்ணி அருகே தெற்குப் பொய்கைநல்லூர் பறவை சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தரராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி சோதனை செய்தனர் அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாப்பா கோவில் பெரிய நரியன்குடி சேர்ந்த ஜெயராமன் என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி 51,000 இருந்தது தெரியவந்தது இதை அடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரேணுகாதேவி தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சந்திரகலா ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.