நாகையில், வட்டாட்சியர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை.போலீசார் வருவதை அறிந்து வெளியில் வீசப்பட்ட 14,000 ரூபாய் லஞ்ச பணம் சிக்கியது.
தமிழகம் முழுதும் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக இன்று நாகை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம்
சர்வே செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சப்பணம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அங்கு அதிரடியாக நுழைந்த நாகை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே நுழைந்ததை கண்டு, அங்கிருந்தோர் பணத்தை ஜன்னல் வெளியே வீசி உள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம் முழுதும் சல்லடையாக தேடிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் கண்ணில் அப்பணம் சிக்கியது. இதையடுத்து வெளியில் வீசி எறியப்பட்ட 14,000 ரூபாய் பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், பணத்தை யார் வீசியது என்றும் கணக்கில் வராத அப்பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.