Skip to content
Home » வேகத்தை அதிகரித்த மாண்டஸ்……மாமல்லபுரத்தை நெருங்குகிறது…..

வேகத்தை அதிகரித்த மாண்டஸ்……மாமல்லபுரத்தை நெருங்குகிறது…..

வங்கக்கடலில் கடந்த 5-ந்தேதி உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று அதிகாலையில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை தீவிர புயலாக இருந்து, பின்னர் மீண்டும் புயலாக வலுவிழந்து, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும் என்றும், அதனை தொடர்ந்து நள்ளிரவு முதல் நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது.
புயலின் மையப்பகுதி என்று அழைக்கப்படும் கண் பகுதி சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தை சுற்றிய பகுதிகளில் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும் போது குறைந்தபட்சம் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மாமல்லபுரத்தில் புயல் கரையை கடந்தாலும், கரையை கடக்கும் இடத்துக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் புயலின் தாக்கம் இருக்கும். இந்த புயல் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாவட்டங்களில் அதி கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடிய காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு நிர்வாக ரீதியாக ‘ரெட் அலர்ட்’டும், கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’டும் விடுக்கப்பட்டுள்ளது. நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மாண்டஸ் தனது வேகத்தை 11 கி.மீ இருந்து 13 கி.மீட்டராக அதிகரித்து உள்ளது. தற்போது சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது. காரைக்காலில் இருந்து 200 கி.மீ. தொலைவில் பகல் 12 மணிக்குள் மாண்டஸ் தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும் என தெரிகிறது. இன்று நள்ளிரவு அது கரையை கடக்க தொடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!