Skip to content
Home » தமிழக வனப்பரப்பை 33% உயர்த்த நடவடிக்கை….அமைச்சர் மதிவேந்தன் தகவல்

தமிழக வனப்பரப்பை 33% உயர்த்த நடவடிக்கை….அமைச்சர் மதிவேந்தன் தகவல்

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள வனக்கல்லூரியில் 27வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்  இன்று துவக்கி வைத்தார்.

வனக்கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் 12 மண்டல வனத்துறையை சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முன்னதாக விளையாட்டு ஜோதி ஏற்றப்பட்டது. மேலும் இந்த ஆண்டில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் அவர்கள் வென்ற பரிசுகள் மற்றும் கோப்பைகளை அமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

இந்நிகழ்வில்  வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் விழாவில் பேசியதாவது:

தமிழ்நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் போட்டி, கேலோ இந்தியா போட்டிகள், ஃபார்முலா ஃபோர் கார் பந்தயம், நீர் சருக்கு விளையாட்டுகள் ஆகியவை தமிழ்நாட்டில் நடத்தி பெருமை சேர்த்திருக்கிறார். பாரிஸில் பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற மாரியப்பன் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1992 ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில் எட்டாவது அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற்றது.

28 வது அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற தமிழக வனத்துறை விளையாட்டு வீரர்களுக்கு அரசு சார்பில் தங்கம் வென்ற வீரர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வெள்ளி பதக்கம் என்ற வீரர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வெண்கல பதக்கம் வென்ற வீரர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனை உயர்த்தி வழங்குவதற்கான கோரிக்கை வர பெற்றுள்ளதை முன்னிட்டு இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த கோரிக்கை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டின் வனப்பரப்பை 10 ஆண்டுகளில் 23.76 சதவீதத்தில் இருந்து 33 சதவிகிதமாக அதிகரிப்பதற்கு 260 கோடி நாட்டு மரங்களை நட்டு கால சூழ்நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு பல்வேறு இயக்கங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதல்முறையாக திண்டுக்கல் கரூர் மாவட்டங்களுக்கு இடையே தேவாங்கு சரணாலயம் உருவாக்கப்பட்டுள்ளது,

ஈரோடு மாவட்டத்தில் பெரியார் வன சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டின் மாநில வனவிலங்கான வரையாடுகளுக்காக நீலகிரி வரையாடு திட்டம், கிழக்குத் தொடர்ச்சி மலையில் சூழல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அழிந்து வரும் அரிய தாவரங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் 10 கோடி மதிப்பில் விதை பெட்டகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற உள்ள மாநில அளவிலான வனத்துறை போட்டியில் விளையாட்டு வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-20ம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற உள்ள 27 வது அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர் வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் விளையாடுவதற்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

மருதமலை பகுதியில் இருக்கும் குப்பை கிடங்கை எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாக கூறினார். மேலும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஊதியம் குறித்து பரிசோதித்து வருவதாகவும் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் எனவும் தெரிவித்தார். மேலும் மனித விலங்கு மோதலால் ஏற்படும் விளைவுகளுக்கு நிவாரணத்தை முதலமைச்சர் அதிகப்படுத்தியும், விரைவு படுத்தியும் இருப்பதாக தெரிவித்தார். யானைகளை வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருப்பதற்கு தற்பொழுது பல்வேறு நவீன கருவிகள் வந்திருப்பதை குறிப்பிட்ட அமைச்சர் இவற்றை கோவை வனப்பகுதியில் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் வனத்துறை நிதியில் பல்வேறு புதிய நவீன கருவிகளை வாங்கி ஒவ்வொன்றாக பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் 40 ட்ரக்கிங் சாலைகளை கண்டறிந்துள்ளதாக தெரிவித்த அவர் கூடிய விரைவில் விளையாட்டு துறை அமைச்சர் அதனை திறந்து வைக்கு இருப்பதாகவும் அது குறித்தான விவரங்கள் ஆன்லைனில் தெரியப்படுத்தப்படும் என்றார்.

நன்னீர் நாய்கள் குறைந்தது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், மிகவும் தெரியபட்ட விலங்குகள் எல்லாம் தற்பொழுது அரிய வகை விலங்குகளாக மாறிவிட்டதாகவும் அது குறித்து கவனம் எடுத்து நடவடிக்கை மேற்கொள்வோம் தற்போது வரையாடுகள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *