Skip to content
Home » மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

மயிலாடுதுறையில் மொழி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…..

தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகத்தை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்காக தமிழ்நாட்டில் மொழிகள் ஆய்வகம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக பேச்சு:-

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான மாணவர் கையாளும் மொழி ஆய்வகங்களை நிறுவி வருகிறது. 2023-24-ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும்

மாணவர்கள் சரளமாக ஆங்கில மொழியை கையாளும் திறனை மேம்படுத்துவதில் இத்திட்டம் முனைப்புடன் செயல்படுகிறது. மாநிலம் முழுவதிலும் ரூ.23 கோடி பட்ஜெட்டில் 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள மொத்தம் 89,680 செயல்படும் நிலையில் உள்ள கணினிகள் மொழி ஆய்வகங்களாக செயல்படும். இந்த மொழி ஆய்வகங்களின் வாயிலாக அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 35 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இந்த திட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்றனர். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வகத்தில் உள்ள கணினியை இயக்கி பார்த்து மாணவர்களுடன் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதற்காக தமிழ்நாட்டில் மொழிகள் ஆய்வகம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழி அறிவு, சாஃப்ட் ஸ்கில் ட்ரைனிங் மூலம் எளிதாக வேலைவாய்ப்பை பெற முடியும். மொழி ஆய்வகத்தை முறையாக பயன்படுத்தி செய்முறை தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு பள்ளி கல்வித்துறை மூலம் வழங்கப்படும். இந்த மொழிகள் ஆய்வக திட்டம் குறித்து இந்த பள்ளியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவன் தனக்கு எளிய முறையில் விளக்கியதாகவும் தெரிவித்தார்.
தமிழக அரசு கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு விடியலை நோக்கி பயணம் மேற்கொண்ட போது இதே குத்தாலம் பகுதியில் போலீசார் என்னை கைது செய்து தனியார் மண்டபத்தில் ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்தனர். தற்போது அதே போலீசார் எனக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர் என்று நினைவு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!