Skip to content
Home » மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து…. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….

  • by Senthil

தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் தஞ்சை – நாகை சாலையில் மரக்கடை வைத்துள்ளார். இந்த மரக்கடையில் தேக்கு மரத்தினால் ஆன பீரோ, கட்டில், மேஜை உட்பட பொருட்களும், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய பழைய மரப்பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன.

நேற்று வழக்கம் போல் அசோக் கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் இரவு சுமார் 11 மணியளவில் திடீரென இந்த மரக்கடை தீப்பிடித்து எரிந்தது. முழுவதும் மரப்பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென வேகமாக பரவியது. இதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து உடன் போலீசாருக்கும், தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். உடன் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

மேலும் அந்த பகுதியிலும் முழுவதுமாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. கடையில் தீவிபத்து ஏற்பட்டது குறித்து அறிந்த அசோக் விரைந்து வந்து கதறி அழுதார். கடையில் இருந்த தேக்கு மரக்கட்டைகள் இந்த தீவிபத்தில் முற்றிலும் எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த மரக்கடைக்கு பின்புறம் உள்ள கடைகளுக்கும் தீ பரவக்கூடாது என்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.
இந்த மரக்கடைக்கு பின்புறம் பழைய மாரியம்மன் கோவில் சாலை ஆடக்கார தெருவில் பிளாஸ்டிக் குடோனில் காலியான பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய இரும்பு பொருட்கள் ஆகியவை இருந்தன.

இவற்றின் மீது தீ பற்றி எரிந்துவிடக்கூடாது என்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்ததுடன் குடோன் பகுதிக்குள் நின்று கொண்டு மரக்கடைக்குள் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மரக்கடையின் அருகே கடைகளில் இருந்த பொருட்களை அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் வந்து அப்புறப்படுத்தினர். தீ விபத்து குறித்து அறிந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினர். இரவு 12.30 மணி வரை தீ அணைக்கப்படவில்லை. தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகள் வெகு வேகமாக நடந்தது. மேலும் தஞ்சை – நாகை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ரூ.60 லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து சாம்பலானது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!