மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ., சிவசேனா அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அடங்கிய ‘மஹாயுதி’ கூட்டணி 288 தொகுதிகளில் 230 ஐ கைப்பற்றியது. 132 தொகுதிகளில் வென்ற பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 57, அஜித்பவாரின் தேசியவாத காங்., 41 இடங்களை பிடித்தன.
நேற்று நடந்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபைக்கான பா.ஜ., தலைவராக பட்னவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோருடன் ராஜ்பவன் சென்று, கவர்னர் சி.பி.ரதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இன்று மாலை 5:30 மணிக்கு பதவிப்பிரமாணம் நடக்கும் என கவர்னர் அறிவித்தார். இதன்படி, இன்று மாலை நடந்த விழாவில் முதல்வராக பட்னவிஸ் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் ஆகியோரும் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தலைவர் நட்டா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், சல்மான் கான், சஞ்சய் தத் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.