மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ் பெற்ற ஶ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் துவக்க விழா இன்று நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இவ்விழாவில் மதுரை ஆதீனம் பேசுகையில், தமிழகத்தில் ஆன்மீகமும் அரசியலும் ஒன்றாக கலந்து விட்டது. தருமபுரம் ஆதீனத்தில் தேவாரம் சொல்லித் தரப்படுகிறது. மேலே நரேந்திர மோடி ஆட்சி வேண்டும். கீழே திமுக ஆட்சி வேண்டும். தமிழை வளர்த்தது ஆதீனங்கள் தான். சம்பிரதாயங்களை பாதுகாத்தது தருமபுரம் ஆதீனம், பல்வேறு புலவர்களை உருவாக்கியுள்ளது. முனைவர்களாக உள்ளவர்களை படிக்க வைத்து ஆதீன புலவர்கள் ஆகவும் பண்பாளர்களாகவும் ஆக்கி உள்ளது தருமபுர ஆதீனம். அமைச்சருடன் நெருங்கி பேசியதற்கு என்னை திமுககாரன் என்று முத்திரை குத்துகின்றனர். எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானவன் நான் என்றார்.