கரூரில், முன் விரோதம் காரணமாக கூலிப்படையை வைத்து தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த 6 பேர்கள் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் கரூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கரூர் ராயனூர், பழனிவேல் நகரைச் சேர்ந்த முகேஷ் (எ) ராமசுப்பிரமணி இவர், தனது முதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டு திருமாநிலையூரைச் சேர்ந்த சோபனா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், சோபனாவின் வீட்டில் அவ்வப்போது தங்கி வந்த அவரது தோழியான ரம்யா, என்பவருக்கும் தொழிற்பேட்டையை சேர்ந்த விஜய் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததால் விஜயின் குடும்பத்தினருக்கும், சோபனாவிற்கும் கடந்த மாதம் 10-ம் தேதி பிரச்சனை ஏற்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்ட சோபனாவின் கணவர் முகேஷ் (எ) ராமசுப்பிரமணி விஜயின் உறவினர்களை பழிவாங்கும் நோக்கத்தில் தனது வீட்டில் அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு ஆயுதங்கள் இருப்பதை கண்ட போலீசார் அவற்றை கைப்பற்றி தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து, முகேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களின் தகவல் கிடைத்துள்ளது.
இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் முகேஷின் கூட்டாளிகளான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சித் சக்கரவர்த்தி,
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த கோபால் (எ) பெரிய கோபால்,
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த
செந்தில் (எ) ஓட்டக்காது,
சென்னிமலையை சேர்ந்த
யுவராஜ்,
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலு (எ) பாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கிகள் 02. துப்பாக்கி தோட்டாக்கள் 06 ஆகியவைகளை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேர்களை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
முன் விரோதம் காரணமாக கூட்டாளிகளை வைத்து தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய கும்பலை போலீசார் பிடித்த சம்பவம் கரூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.