Skip to content
Home » குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

குறைகளை கூறுங்கள்.. பொய்களை கூறாதீர்கள்.. ஊடகங்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வேண்டுகோள்..

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் வடக்கு மாநகர பகுதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். கரூர் மாநகர வடக்கு பகுதி திமுக சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு, மூன்று சக்கர ஸ்கூட்டர்களை வழங்கினார். இதில் வடக்கு மாநகரப் பகுதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில்… திமுக அரசு பொறுப்பேற்ற காலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மருந்து, மாத்திரைகள், படுக்கை வசதிகள் இல்லாத போது அதை சீர்திருத்தும் பணிகளுக்கு அமைச்சர்களை நியமித்து தேவையான வசதிகளை தமிழக முதல்வர் செய்து கொடுத்தார். கொரோனா பாதிப்புக்கு உள்ளான பக்கத்து வீட்டுக்காரர்களிடமே பேசுவதற்கு பயந்த சூழ்நிலையில், கோவையில் கொரோனா சிகிச்சையில் இருந்த நோயாளிகளை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் ஆறுதல் தெரிவித்தார்.

பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்ட முதல்வர் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதுவரை 276 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். தமிழக முதல்வர் செயல்படுத்திய திட்டங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்து வருகின்றனர்.

505 வாக்குறுதிகளில் 85% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 லட்சம் மாணவர்களுக்கு 500 கோடி நிதியில் காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதிமுகவினர் பொய் குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள். 410 ரூபாய்க்கு இருந்த சிலிண்டர் விலை 1200 ரூபாய்க்கு கொண்டு வந்த பாஜக அரசை கேள்வி கேட்க முடியாமல், தைரியம் இல்லாமல் அடிமையாக அதிமுகவினர் உள்ளனர். ஊடகங்கள் உண்மையை அறியாமல் செய்தி வெளியிட வேண்டாம். தவறை சுட்டிக்காட்டுங்கள். குறைகளை சரி செய்ய தயாராக இருக்கிறோம். நமது இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்பதை திமுகவினர் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!