பெங்களூருவில் உள்ள கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் கண்காணிப்பாளராக இருந்தவர் சந்திரசேகரன் (50) . நேற்றுமுன்தினம் தனது சொந்த ஊரான ஷிமோகாவுக்கு சென்ற இவர்,தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சந்திரசேகரன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதிய 6 பக்க கடிதத்தை ஷிமோகா பாஜக எம்எல்ஏ எஸ்.என்.சென்னபசப்பா பெங்களூருவில் நேற்று வெளியிட்டார். அதில், “கர்நாடக அரசின் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் பல்வேறு கணக்குகளில் ரூ.187.3 கோடி மானியமாக உள்ளது. அதனை வெவ்வேறு கணக்குகளில் மாற்றி கொள்ளையடிக்க உதவுமாறு ஆணையத்தின் நிர்வாகஇயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமைகணக்காளர் பரசுராம் வற்புறுத்தி வந்தனர். இதனால் முதல்கட்டமாக ரூ.20கோடியும், 2-ம் கட்டமாக ரூ.27 கோடியும் அவர்கள் கூறிய வங்கிக்கணக்கில் செலுத்தினேன். கடந்த ஓராண்டில் ரூ.87 கோடி வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதற்கு யூனியன் வங்கியின் எம்.ஜி. சாலை கிளைமேலாளர் சுஷ்சிதாவும் உடந்தையாக இருக்கிறார். எஞ்சியுள்ள ரூ.100 கோடியும் சுருட்டுவதற்கு என்னை வற்புறுத்தி வருகின்றனர். என்னை ஊழல் செய்ய வற்புறுத்தி வருவதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். மூத்த அதிகாரிகளின் ஆணையை தட்டிக்கழித்தால் என்னை வேறு விதமாக தண்டிக்கின்றனர். அதனால் நான் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜி.பத்மநாபா, பரசுராம், சுஷ்சிதா ஆகிய 3 பேர் மீதும் பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.