Skip to content
Home » காணும் பொங்கல் கொண்டாட்டம்… தஞ்சையில் மக்கள் குவிந்தனர்

காணும் பொங்கல் கொண்டாட்டம்… தஞ்சையில் மக்கள் குவிந்தனர்

பொங்கல் பண்டிகையின் 3வது  நாளான இன்று காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராமங்களில் காணும் பொங்கலுக்கு தனியிடம் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து கிராமப் பகுதிகளிலும் காணும் பொங்கலை ஒட்டி கணுப்பிடி வைத்து இளம் பெண்கள் வழிபட்டனர்.  உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் ஒருவகை நோன்பு இது.

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் 3வது நாள் இடம்பெறும் விழா . காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பொங்கல் என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள்  கிராமங்களில் இடம் பெறும்.

இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள் கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில், முகத்தில் பூசிக்கொள்வார்கள். கணுப்பிடி இந்நாளின் சிறப்பு. இது ஒருவகை நோன்பு. உடன்பிறந்த சகோதரர்களுக்காக பெண்கள் செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்தனை செய்தனர்.

காணும் பொங்கலையொட்டி தஞ்சை பெரியகோவிலில்  இன்று காலை முதல் சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் தஞ்சை மாவடடத்தின் பல சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காணும் பொங்கல் என்றாலே சுற்றுலா தலங்களுக்கு சென்று உற்றார், உறவினர்களுடன் பேசி பொழுது போக்குவது வழக்கம். இதையொட்டி தஞ்சையில் முக்கிய சுற்றுலா தலங்களான பெரியகோவில், மணிமண்டப பூங்கா, அரண்மனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் காலை முதலே வரத் தொடங்கினர். காணும் பொங்கலை கொண்டாட தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வேன்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தோடு தஞ்சைக்கு வந்திருந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு வந்திருந்தவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் பெரிய கோவிலில் குவிந்தனர். இதேபோல் மணிமண்டப பூங்காக்களில் குடும்பத்தோடு அதிகமானோர் வந்திருந்தனர். அங்குள்ள ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பொருட்களில் தங்களது குழந்தைகளை வைத்து அவர்களும் விளையாடி மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!