Skip to content
Home » பணிக்கு திரும்புங்கள்… கொல்கத்தா மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

பணிக்கு திரும்புங்கள்… கொல்கத்தா மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

  • by Authour

கொல்கத்தா ஆர்.ஜி  கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரி வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்தை சிபிஐ விசாரணைக் குழுவினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் இச்சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

பயிற்சி மருத்துவர் படுகொலை குறித்த விசாரணை இன்று காலை தொடங்கியதும், தலைமை நீதிபதி அமர்வு கூறுகையில், ” போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் அவர்களது பணிக்குத் திரும்ப வேண்டும். மருத்துவர்கள் அவர்கள் பணிகளுக்குத் திரும்பியதும் அவர்களுக்கு எதிராக உயர் அதிகாரிகள் நடவடிக்கைகளை எதுவும் எடுக்க கூடாது என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் அதில் நீதிமன்றம் தலையிடும்.” என்றும் நீதிபதி அமர்வு தெரிவித்தது. “மருத்துவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்றால், பொது சுகாதார உள்கட்டமைப்பு எவ்வாறு செயல்படும்?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இயற்கைக்கு மாறான மரணம் என மேற்கு வங்க காவல்துறை வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாகவே பயிற்சி பெண் மருத்துவரின் உடற்கூராய்வு நடத்தப்பட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. போலீசார் இவ்விவகாரத்தை கையாண்ட விதத்தை, நாங்கள் எங்கள் 30 ஆண்டுகால பணியில் எங்கும் பார்த்ததில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின் தற்போதைய நிலவரம் குறித்து இன்னும் 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 3 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆர்.ஜி கர் மருத்துவமனையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறை தடியடி சம்பவங்கள் குறித்து மேற்கு வங்க அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *