Skip to content
Home » நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவன் சஸ்பெண்ட்….

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவன் சஸ்பெண்ட்….

  • by Senthil

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அபர்ணா பாலமுரளியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, அதனை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அபர்ணா. அவர் நடிப்பில் தற்போது ‘தன்கம்’ என்கிற மலையாள படம் தயாராகி உள்ளது. இந்த படம் வருகிற ஜனவரி 26-ந் தேதி ரிலீசாக உள்ளது. சஹீத் அராபத் இயக்கியுள்ள இந்த படத்தில் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோசன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தன்கம் படத்தின் புரமோஷனுக்காக கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் அமர்ந்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளியிடம் வந்த கல்லூரி மாணவர் ஒருவர், அவருக்கு பூ கொடுத்துவிட்டு, சட்டென அவரது கையை பிடித்துள்ளார். பின்னர் அவருடன் போட்டோ எடுப்பதற்காக எழுந்தபோது அந்த மாணவர் தோள்மீது கையை போட்டதை சற்றும் விரும்பாத அபர்ணா, அவரின் பிடியில் இருந்து நழுவி மீண்டும் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.

பின்னர் மீண்டும் மேடை ஏறி வந்த அந்த மாணவர், தான் தவறாக எதுவும் நடந்துகொள்ளவில்லை. உங்களின் ரசிகனாக உங்களுடன் போட்டோ எடுக்க தான் வந்தேன் என விளக்கம் அளித்துவிட்டு, மீண்டும் அபர்ணாவுக்கு கைகொடுக்க முயன்றார். அப்போது அந்த நபருக்கு கைகொடுக்க மறுத்து விட்டார் அபர்ணா பாலமுரளி. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட மாணவரும், கல்லூரியின் மாணவர் பேரவையினரும் நடிகையிடம் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், மாணவரின் விளக்கம் திருப்திகரமாக இல்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்துமீறிய சட்டக் கல்லூரி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவரை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து சட்டக்கல்லூரி பணியாளர் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!