Skip to content
Home » கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… திருச்சி தேவாலயங்களில் நள்ளிரவு பிராத்தனை…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… திருச்சி தேவாலயங்களில் நள்ளிரவு பிராத்தனை…

  • by Senthil

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. அத்துடன் பல தேவாலயங்களின் முன்புறத்தில் கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் குடில்களும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சியில் தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயத்தில் நேற்று இரவு 11 மணிக்கு மேல் சிறப்பு திருப்பலி தொடங்கியது. திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் திருப்பலியை நடத்தினார். பங்கு தந்தை சகாயராஜ் முன்னிலை வகித்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

நள்ளிரவு 12 மணி ஆனதும் ஆலயத்தில் குழந்தை இயேசுவின் சொரூபம் தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலுக்கு கொண்டுவரப்பட்டு முன்னணியில் கிடத்தப்பட்டது. அப்போது இயேசு பிறப்பின் பாடல்களை கிறிஸ்தவர்களால் உற்சாகமாக பாடப்பட்டன. திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருச்சி மெயின்கார்டு கேட்டில் உள்ள லூர்து அன்னை ஆலயம், பாலக்கரை சகாயமாதா பசிலிக்கா, புத்தூர் பாத்திமா அன்னை ஆலயம், கிராப்பட்டி தெரேசாள் ஆலயம், கருமண்டபம் குணமளிக்கும் மாதா ஆலயம், எடத்தெரு புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஏர்போர்ட் புனித அந்தோணியார் ஆலயம், கே.கே.நகர் ஜெகன்மாதா ஆலயம், காட்டூர் அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் பங்கு தந்தையர்கள் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. மேலும் திருச்சி மாநகரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!