Skip to content
Home » பொன்விழா ஆண்டு….. பெண் போலீசாருக்கு 9 திட்டங்கள்…. முதல்வர் அறிவிப்பு

பொன்விழா ஆண்டு….. பெண் போலீசாருக்கு 9 திட்டங்கள்…. முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

தமிழக காவல் துறையில் பெண் போலீசின் பொன் விழா ஆண்டு  இது. 1973-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதிதான் தமிழக காவல் துறையில் பெண் போலீசின் முதல் காலடிச்சுவடை பதிக்க வைத்தார். அவர் தொடங்கி வைத்த பெண் போலீஸ் 50 ஆண்டுகளை தொட்டு இன்று ஆண் போலீசுக்கு இணையாக, பெரிய ஆலமரமாக வளர்ந்து நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறார்கள்.

1973-ம் ஆண்டு முதல்-முதலில் பெண் போலீஸ் தொடங்கியபோது ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு ஏட்டு, 20 போலீசார் அடங்கிய சிறிய படைதான் இருந்தது. அந்த பெண் போலீஸ் படைக்கு முதல் சப்-இன்ஸ்பெக்டராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார். 22 பேருடன் தொடங்கப்பட்ட பெண் போலீஸ், தற்போது 35 ஆயிரத்து 329 பேருடன் தலை நிமிர்ந்து நிற்கிறது. 1 டி.ஜி.பி., 2 கூடுதல் டி.ஜி.பி.க்கள், 14 ஐ.ஜி.க்கள் இந்த பெண் போலீசில் அணிவகுத்து நிற்கிறார்கள்.

1976-ல் தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக திலகவதி தேர்வு பெற்று சாதனை படைத்தார். தமிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பி. என்ற பெருமை பெற்றவர் லத்திகாசரண். சென்னையின் முதல் பெண் கமிஷனரும் இவர்தான். இந்த பெருமையை லத்திகாசரணுக்கு வழங்கியவரும் முதல்-அமைச்சர் கருணாநிதிதான். தமிழக போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் டில்லியில் சி.பி.ஐ. போலீசில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி பெருமை சேர்த்தார்.

முதல்-அமைச்சராக தந்தை கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட பெண் போலீசின் பொன் விழாவுக்கு தலைமை தாங்கி நடத்தும் பணியை அவரது மகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) பெற்றுள்ளார். இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த பிரமாண்ட விழா நடந்தது.  பெண் போலீசின் பொன் விழா முழுக்க, முழுக்க பெண் போலீசாரால்தான் நடத்தப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விழா நடக்கும் அரங்கத்துக்கு  குதிரைப்படை பெண் போலீசார் வரவேற்று அழைத்து வந்தனர்.  அதைத்தொடர்ந்து பெண் போலீசின் பேண்ட் வாத்தியங்கள் முழுங்க நிகழ்ச்சிகள் தொடங்கியது.

கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு  இயந்திர துப்பாக்கியை கையாளும் சாகசத்தை பெண் கமாண்டோ படையினர் செய்து காட்டினர். விழாவையொட்டி சிறப்பு தபால் தலையையும் முதல்-அமைச்சர்  ஸ்டாலின் வெளியிட்டார்.  விழாவில்  அவள்  என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர்  பேசியதாவது:

மகளிர் தின உரையில் பெண்கள் மீதான பார்வையை ஆண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினேன். அதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்று பெண் காவலர்கள் நிகழ்த்திக் காட்டிய வீர செயல்கள், இங்குள்ள அனைத்து ஆண்களின் பார்வையையும் மாற்றிவிட்டது.

இது பொன் விழா என்பதுடன் பெண் விழாவாகவும் நடக்கிறது.  இங்கு சிங்கப்பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள்.  இதைப்பார்க்க  பெரியார், அண்ணா, கலைஞர் இல்லையே என்ற ஏக்கம் தான் எனக்கு வந்தது.

பெண்கள் கைகளில் உள்ள  கரண்டியை பறித்து அவர்களுக்கு புத்தகங்கள் கொடுக்க வேண்டும் என்றார் பெரியார்.  பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும்.  பெண்கள் பேண்ட் சட்டை அணிய வேண்டும், கிராப் வேண்டும்  என்றார் பெரியார்.

பெண்கள் அரசியல் சக்தியாக வரணும், மேடையில் முழங்கணும் என்றார்  அண்ணா.  பெண்கள் உயர் கல்வி படிக்கணும், அவர்கள்  தகுதிக்கு ஏற்ற வேலைக்கு வரணும் என்றார் கலைஞர். இன்று பெண் காவலாகள் துப்பாக்கி ஏந்தி உள்ளனர். இதற்க விதை விதைத்தவர் கருணாநிதி.  பெண் போலீசின் பொன்விழாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களின்  உயிர் , உடமைகளுக்கு நீங்கள் பொறுப்பு.

தமிழக முதல்வராக இருந்து கரணாநிதி 1973ல் சென்னையில் முதன் முதலாக பெண் போலீஸ்  படையை தொடங்கினார். ஒரு எஸ்.ஐ. 21 காவலர்களுடன் தொடங்கப்பட்ட பெண் போலீஸ் படை இன்று  35 ஆயிரம் 329 பேருடன் விளங்குகிறது.  தமிழக போலீசில் காவலர் முதல் டிஜிபி வரை பெண் போலீசார் பதவியில்  இருந்துள்ளனர்.

எனவே தந்தையால் 50 வருடங்களக்கு முன் தொடங்கி வைத்த திட்டத்தின் பொன்விழாவில் அவரது மகன் நான் கலந்து கொள்வதில்  எனக்கு கவுரவம்.  ஊருக்கு உழைக்கும்  காவலர்களுக்கு பாராட்டு விழா, பெண்களின் தியாகத்தை நாம் மதிக்க வேண்டும் என்பதற்காக இந்த பாராட்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று சொன்னேன்.

பெண்கள் குடும்ப பணியையும் சேர்த்து நாட்டை காக்கும் பணியையும் செய்கிறார்கள. அவர்கள் வீட்டையும், நாட்டையும் காக்கிறார்கள்.   எனவே ஆண் காவலருக்கு ஒரு சல்யூட் என்றால் பெண் காவலருக்கு 2 சல்யூட்.  அதனால் தான் பெண் போலீசாருக்க முழு மரியாதை தரணும் என  கேட்டுக்கொள்கிறேன்.

1989வரை குரூப் 1 தேர்வு மூலம் பெண்கள்  காவல் துறை பணியிடத்திற்கு வராததால்  அதில் பெண்களும் வரவேண்டும் என்பதற்காக பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கியது திமுக அரசு.  அதனால் இன்று குரூப் 1 மூலம் பதவிக்கு வந்தவர்கள் டிஜிபி வரை பதவிக்கு வந்து உள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அதாவது 1967க்கு முன்னமே போலீசுக்காக குரல் கொடுத்தவர் கருணாநிதி. அவரது  உதயசூரியன் நாடகத்தில் போலீசாரின் கஷ்டங்கள் குறித்து ஒரு பாடல் உண்டு. அந்த பாடலை எழுதி நடித்தவர் கருணாநிதி. அதனாலேயே  அந்த நாடகம் தடை செய்யப்பட்டது. ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால் பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. சீருடையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.  கால்சட்டை சீருடை முழு பேண்டாக மாற்றப்பட்டது.  73ல் ஆரம்பிக்கப்பட்ட பெண் போலீஸ் படையின் பயிற்சி நிறைவு விழா 76ல் அப்போதைய காவல்துறை அதிகாரி ஐஜி அருள் தலைமையில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்தது.

170 ஆண்டு  கால தமிழக காவல் துறை வரலாற்றில் சென்னை மாநகரின் முதல் பெண் போலீஸ் கமிஷனரையும், முதல் டிஜிபியும் திமுக ஆட்சியில் தான் நியமிக்கப்பட்டனர். தமிழக சட்டம் ஒழுங்கு போலீஸ் பிரிவில்  37% பேர் பெண் இன்ஸ்பெக்டர்கள். இது தான் திராவிட மாடல் ஆட்சி.

பொன்விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பெண் காவலா்களுக்கு நவரத்தினம் போன்ற 9 திட்டங்களை அறிவிக்கிறேன்.

1 பெண் போலீசாருக்கான ரோல் கால் இனி காலை 7 மணிக்கு பதில் 8 மணிக்கு என மாற்றப்படும்.

2. சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் பணியாற்றம் பெண் போலீசாருக்கு தங்கும் விடுதி ஏற்படுத்தப்படும்.

3.அனைத்து மாவட்டங்களிலும் பெண் காவலர்களுக்கு ஓய்வறை, கழிவறை வசதியுடன் செய்து தரப்படும்.

4.பெண் காவலர்களின்  குழந்தைகளுக்கு  காவல் குழந்தைகள் காப்பகம் மீண்டும் தொடங்கப்படும்.

5.பெண் காவலர்களுக்கு ஆண்டு தோறும்  கலைஞர் காவலர் விருது வழங்கப்படும்.

6.பெண் காவலர்களின் குடும்ப சூழ்நிலையை கருதி, விடுப்பு, பணியிட மாற்றம்  வழங்கப்படும்.

7.பெண் காவலர்களுக்கு ஆண்டுதோறும் துப்பாக்கி சூடும் போட்டி நடத்தி  பரிசு, விருது வழங்கப்படும்.

8.பெண் காவலர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய மாநாடு நடத்தப்படும்.

9.டிஜிபி தலைமையில் பணிவழிகாட்டு ஆலோசனை குழு தொடங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை கமிஷனர் சங்கர்ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!