நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன்.
இன்று கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக காரில் நாகை வந்து கொண்டிருந்தார். திருப்பூண்டி காரைநகர் அருகே காரில் செல்லும்போது குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் காரை திருப்பினார்.
அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே உள்ள பெரியாச்சி அம்மன் கோவில் மதில் சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காரின் முன்பக்க பகுதி சேதமடைந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மற்றும் ஓட்டுநர் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
லேசான சிறு காயத்தோடு தற்பொழுது அவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக சென்றுள்ளனர். டூவீலரில் வந்த அன்பழகன் என்பவரும் லேசான காயத்துடன் தப்பினர். அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.