கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலை தமிழகத்தின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுள் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்தச் சாலையில் சென்று வருகின்றன. இந்தச் சாலை அதிக வளைவுகள் கொண்டதாகும். இந்தச் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் பல்லாங்குழி சாலையாக உள்ளது. இந்தச் சாலையிலும் தனியார் பஸ்கள் அதி விரைவாகச் செல்கின்றன. ஆபத்தை உணராமல் பயணிகளும் பஸ்ஸின் படிக் கட்டுகளில் தொங்கியப் படி கூடச் செல்கின்றனர். இதனால் விபத்துகள் நேர்கின்றன. இதைப் பற்றி தனியார் பஸ்கள் கவலைப் படுவதில்லை. இந்தச் சாலையில் செல்லும் தனியார் பஸ்களின் அதி வேகத்தால், சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். சமீபத்தில் பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா இந்தச் சாலையில் அய்யம் பேட்டையிலிருந்து பாபநாசம் நோக்கி வரும் போது சரபோஜிராஜபுரம் அருகே கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கி ஒரு அரசு பஸ் சென்றுக் கொண்டிருந்தது.

இதன் பின்னால் அதி வேகமாக வந்த தனியார் பஸ் அரசு பஸ்ஸை முந்திக் கொண்டு, உரசுவது போல் சென்றது. இதைப் பார்த்த பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவும் அவருடன் வந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பயணிகளை அச்சறுத்தும் வகையில் வந்த தனியார் பஸ் குறித்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும், அய்யம்பேட்டை போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் தனியார் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சாலையில் செல்லும் தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப் படுத்த வேக கட்டுப் பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்பது பஸ் பயணிகள், இரு சக்கர வாகன ஓட்டிகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.