டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் இவ்வாண்டு 1, லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர் எவ்வாண்டும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு நாகை மாவட்டத்தில் மகசூல் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்களாக கனமழை ஆங்காங்கே வெளுத்து வாங்கி வருகிறது இதன் காரணமாக, சிக்கல் பாலையூர் கீழ்வேளூர் கீழையூர் திருமருகல் திட்டச்சேரி ஆலத்தூர், ஆயக்காரன்புலம் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 40,000 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. கடைமடை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாமல் அங்குள்ள விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். இதனிடையே நாகை மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர்

பரப்பளவில் பயிரிடப்பட்ட உளுந்து பயிர் மழைநீரில் சூழ்ந்துள்ளது மேலும் அறுவடைக்கு வந்த இயந்திரங்கள் வயலில் தேங்கியுள்ள மழை நீரால் அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாமல் ஆங்காங்கே உள்ள வயல்களில் சிக்கி உள்ளன.
நாகை மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிப்புக்குள்ளான பயிர்களை மத்திய மாநில அரசுகள் பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன் ஈரப்பதம் பார்க்காமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழைக்கு பின்னர் கடைமடை பகுதிக்கு தேவையான அறுவடை இயந்திரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அப்பகுதி விவசாயிகள், உளுந்து பயிர் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.