Skip to content
Home » 100-வது நாளாக ராகுல் பாதயாத்திரை….

100-வது நாளாக ராகுல் பாதயாத்திரை….

  • by Senthil

வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்., தலைவர் ராகுல்  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் அவர் நடத்தி வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானுக்குள் இந்த யாத்திரை நுழைந்திருக்கிறது. நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் ராகுலின் இந்த பாதயாத்திரை இன்று  100-வது நாளை எட்டியது. இது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது. ராஜஸ்தானின் டவுசா மாவட்டத்தில் ராகுல் காந்தி நேற்று நடத்திய பாதயாத்திரையில் மாநில தடகள வீராங்கனைகள் பலர் அவருடன் நடந்து சென்றனர். ராகுல் காந்தியின் பாதயாத்திரை 100-வது நாளான இன்று ஆதரவு, எதிர்ப்பு என கடந்த சில மாதங்களாக நாட்டில் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.
ஒருபுறம் கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பாதுகாப்பு படை வல்லுனர்கள் என ஏராளமான பிரபலங்கள் இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து, ராகுல் காந்தியுடன் நடந்து சென்றும் வருகின்றனர். மறுபுறம் ஆளும் பா.ஜனதா சார்பில் இந்த யாத்திரைக்கு கடும் எதிர்ப்பும், குற்றச்சாட்டுகளும் அடிக்கடி எழுந்து வருகின்றன. ராகுல் காந்தியின் தோற்றம், உடைகள் மற்றும் யாத்திரையில் பங்கேற்போர் குறித்து பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை தெரிவிப்பதால் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ஜா கூறும்போது… ‘முதலில் இந்த யாத்திரை, ராகுல் காந்தியின் அரசியல் முத்திரைக்கு புத்துயிர் அளித்துள்ளது. பா.ஜனதா தனது பொய்யான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பயன்படுத்தி அவரை கேலி செய்ய முடியாது. இரண்டாவதாக இந்த வெகுஜன இயக்கத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களுடன் நேரடியாக இணைந்துள்ளது’ என கூறினார். காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தி கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் இந்த நோக்கம் நிறைவேறுமா? என்பது அடுத்த ஆண்டு நடைபெறும் மாநில சட்டசபை தேர்தல்களில் கட்சி பெறும் வெற்றியை பொறுத்து அமையும் என்றுஅரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!