2024ல் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடப்பது உறுதி. இதற்கான பணிகளை எல்லா அரசியல் கட்சிகளும் தொடங்கி விட்டது. வரப்போவது மக்களவை தேர்தல் என்பதால் மாநில கட்சிகளை விட தேசிய கட்சிகளுக்கு அதிக டென்சன்.
பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்து விட்டது. 3வது முறையும் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் கடந்த 9 வருடமாக மறந்திருந்த கூட்டணி கட்சிகளை 2 மாதங்களுக்கு முன் டில்லியில் கூட்டினார். அதில் 38 கட்சிகள் பங்கேற்றன. பாரதிய ஜனதாவுக்கு அடுத்த பிரதான இடத்தில் இருந்தது அதிமுக தான். எடப்பாடி பழனிசாமிக்கு அப்படி ஒரு மரியாதை அங்கு தரப்பட்டது.
அந்த மரியாதையின் மகிழ்ச்சியை அதிமுகவினர் பல நாட்கள் கொண்டாடினர். இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பொரியார், அண்ணா, ஜெயலலிதா குறித்து சில கருத்துக்களை கூறினார். இது வரலாறு என்று சொல்லி மீண்டும் தனது கருத்தில் உறுதிபாட்டுடன் இருப்பதாக கூறினார்.
அதே நேரத்தில் …..நான் தமிழ் நாட்டுக்கு தோசை சுட வரவில்லை. இது துப்பாக்கி பிடித்த கை, 2026ல் அதிமுக தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும் என்று நான் எப்படி கூற முடியும். இதற்காகவா நான் தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கிறேன் என்று காட்டமாக கேட்டார்.
அதாவது எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்பதை அவர் உறுதிபட கூறியதுடன் 2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்றும் கூறினார். இது அதிமுகவினருக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.
அதே நேரத்தில் எடப்பாடியை நீங்கள் முதல்வர் வேட்பாளராக ஏற்காவிட்டால், நாங்கள் மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என அதிமுகவினர் பதிலடி கொடுக்கவில்லை. மாறாக பாஜக கூட்டணியை முறித்துக்கொள்கிறோம் என ஜெயக்குமார் அறிவித்தார். அதற்கு இருதரப்பிலும் ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது.
இந்த நிலையில் தான் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும், தமிழ்நாட்டில் பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனி பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என உறுதியாக கூறினர்.
இதைஅண்ணாமலை எதிர்பார்த்தாரோ என்னவோ, ஆனால் டில்லி தலைமை இதனை எதிர்பார்க்கவில்லை. அதிமுகவினர் நம்மை விட்டு போகமாட்டார்கள் என உறுதியாக நம்பி இருந்தனர். ஆனால் அதிமுகவின் உறுதியான முடிவால் அதிர்ந்து போன டில்லி, சில ரகசிய தூதர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக ஒரு மத்திய அமைச்சர் கூட பேசினாராம். அவர் எடப்பாடியிடம் மட்டுமல்லாமல் மேலும் சில முக்கிய நிர்வாகிகளிடம் பேசி உள்ளார்.
அப்போது அண்ணாமலை பேசியதைக்குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். தேர்தல் முடிந்ததும் அவரை மாற்றி விடலாம். எனவே தேர்தல் வரை பொறுமையாக இருங்கள் என கூறினாராம். அண்ணாமலை தலைவராக இருந்தால் கூட்டணியில் தொடர முடியாது. மேலும் மாவட்ட செயலாளர் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ,,,,, இனி கூட்டணி என்றால் தமிழக மக்கள் எங்களை என்ன நினைப்பார்கள். எனவே கூட்டணி முறிந்தது முறிந்தது தான். அண்ணாமலையை மாற்றிவிட்டு பேச்சுவார்த்தையை நடத்துவது குறித்து யோசிக்கலாம் என்று கூறி உள்ளனர்.
இந்த நிலையில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனையும் டில்லி மேலிடம் அழைத்தது. அவரும் டில்லி விரைந்தார். அவர் அண்ணாமலையை மாற்றினால் தான் அதிமுகவை சமாதானம் செய்ய முடியும் என்ற நிலை தான் அதிமுக முக்கிய தலைவர்களிடம் காணப்படுகிறது. மற்ற எந்த நடவடிக்கையும் அதிமுகவை சமரசம் செய்யாது என்று மேலிடத்தில் கூறி விட்டாராம்.
இதற்கிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடமும் இது குறித்து, பாஜக மேலிடம் அறிக்கை கேட்டதாம். அவரும் கூட்டணி முறிவுக்கான காரணம் குறித்து இரு தரப்பு நிர்வாகிகளிடமும் பேசி ஒரு அறிக்கை தயாரித்து கட்சி தலைவர் நட்டாவிடம் கொடுத்தாராம். அதிலும் அண்ணாமலை மீது பல புகார்கள் கூறி இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் தான் நேற்று மாலை அண்ணாமலை டில்லி விரைந்தார். இன்று அவர் கட்சி தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். அப்போது இந்தியா முழுவதும் பாஜகவுக்கு உருப்படியான கூட்டணி எதுவும் இல்லை. தமிழகத்தில் மட்டும் தான் உருப்படியான ஒரு கட்சி கூட்டணி இருந்தது. அதையும் கெடுத்து விட்டீர்கள் என தலைவர்கள் கோபத்தில் பேசினார்களாம்.
அதிமுக போனால் போகட்டும், வேறு கட்சிகளை வைத்து நாம் ஒரு கூட்டணி அமைத்து விடலாம் என ஒரு புதிய திட்டத்தை அண்ணாமலை வைத்தாராம். அந்த கட்சிகள் பட்டியலை கேட்ட நட்டாவும், அமித்ஷாவும், மேலும் டென்ஷனாகி விட்டார்களாம். இந்த கட்சிகளுக்கு எத்தனை ஓட்டு இருக்கு, இந்த ஓட்டுகளை கொண்டு நாம் எப்படி வெற்றி பெற முடியும் என பதிலடி கொடுத்து உள்ளனர்.
எனவே அண்ணாமலை கட்சி தலைவர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளார். இனி அதிமுக தலைவர்கள் பற்றியும், மறைந்த திராவிட தலைவர்கள் பற்றியும் பேசக்கூடாது என அண்ணாமலைக்கு வாய்ப்பூட்டு போட்டு உள்ளார்களாம். அதே நேரத்தில் அதிமுகவை சமாதானம் செய்து நம்முடைய கூட்டணிக்கு கொண்டு வந்து விட வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் என கண்டிப்புடன் கூறினார்களாம்.
எனவே அண்ணாமலை இனி அதிமுக பற்றி வாய் திறக்க மாட்டார். அதே நேரத்தில் அதிமுகவை டில்லி தலைவர்களே நேரடியாக டீல் செய்து கூட்டணிக்கு கொண்டு வரும் பணியை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கான அசைன்மெண்ட் ஏற்கனவே தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து ஒருவரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். எனவே எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை இடையே ஒருபக்கம் மோதல் இருந்து வந்தாலும், இன்னொரு பக்கம் சமரச பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டு தான் இருக்கிறதாம்.