ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் வழங்கப்படும் லட்டுவில் பயன்படுத்தப்படும் நெய்யில் மாமிசக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி பேட்டி கொடுத்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் கீழ் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்த கலப்பட நெய் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மதம் சார்ந்த விவகாரம் என்பதால் இந்தியா முழுவதும் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த சர்ச்சை குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் கூறும்போது,
“லட்டுகளின் தரம் குறித்து, பக்தர்களிடம் இருந்து சில நாட்களாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனை அடுத்து, சமையலறை ஊழியர்களுடன் பொருட்களின் தரம், குறிப்பாக பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்து பேசியிருக்கிறேன். இதற்கு தீர்வு காண நெய்யின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது”, என்றார்.
தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனம் வெங்கட ரமண ரெட்டி, குஜராத்தில் அமைந்திருக்கும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு மாதிரிகளை அனுப்பியதாகத் தெரிவித்தார்.
ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். ஆனால் இதை ஜெகன்மோகன் ரெட்டி திட்டவட்டமாக மறுத்தார். அரசியல் ஆதாயத்துக்காக நாயுடு இவ்வாறு கூறுவதாக கூறினார்.