கலவர பூமியான மணிப்பூரில் இருந்து உயிர் பிழைத்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை சென்னை துணை ஆட்சியர் ஏற்படுத்திக்கொடுத்தார்.
மணிப்பூர் மாநிலம் சுகுனு பகுதியில் வசித்து வந்தவர் ஜோசப் காம்தேங்தாங் ஸூ (Joseph Kamkhenthang Zou) (61). தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஜோசப் சுமார் 7 வயது இருந்த போது தமிழ்நாட்டில் இருந்து தமது பெற்றோருடன் மணிப்பூருக்கு குடி பெயர்ந்து விட்டார். தமது மனைவி, மூன்று மகள்கள், இரண்டு மகன், ஒரு மருமகள் ஒரு பேரக்குழந்தை என ஒன்பது பேர் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர்.
அண்மையில் மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே கலவரம் உருவாகி குண்டு வீச்சு சம்பவங்களும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் அரங்கேறின. வீடுகள் அனைத்தும் தீக்கிரை ஆக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோசப் குடும்பத்தினர் தங்களது உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு அணிந்திருந்த ஆடையுடன் உயிரை காப்பாற்றிக் கொள்ள முதற்கட்டமாக தங்களது கிராமத்தில் இருந்து வெளியேறினர். வெவ்வேறு மாநிலங்கள் வழியே உயிரை கையில் பிடித்து பயணித்துக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வந்தடைந்தனர் ஜோசப் குடும்பத்தினர்.
சென்னையில் எங்கு செல்வது என செய்வதறியாது ஏக்கத்துடன் காத்திருந்தனர் மணிப்பூர் குடும்பத்தினர். அப்போது சென்னை செங்குன்றத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஜோசப் குடும்பத்தினர் சோகத்துடன் இருப்பதை கண்டு அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது மணிப்பூரில் இருந்து உயிர் பிழைத்து தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறியுள்ளார் ஜோசப். இதனையடுத்து மனிதநேய உள்ளம் கொண்ட மூர்த்தி, மணிப்பூரில் இருந்து தப்பி வந்த ஜோசப் குடும்பத்தினரை தமது ஊருக்கு அழைத்து சென்றுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட மொன்டியம்மன் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் மாதம் 3000 ரூபாய் வாடகைக்கு இருந்த வீட்டில் ஜோசப் குடும்பத்தினரை குடியமர்த்தினார் மூர்த்தி. மேலும் சில மாதங்களுக்கு தானே வாடகையை கொடுப்பதாகவும், வேலை கிடைத்த பிறகு நீங்கள் வாடகையை கொடுங்கள் என்றும் மூர்த்தி ஜோசப்பிடம் கூறியுள்ளார்.