Skip to content
Home » அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்காக கூரை, ஓலை வீடுகள் கணக்கெடுப்பு

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்காக கூரை, ஓலை வீடுகள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாமல், நிலைத்த தன்மையற்ற வீடு, வாழ தகுதியற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுக்க உள்ளது. தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் அல்லது இதர ஓலைகளை கொண்டு கூரை வேயப்பட்ட வீடுகள், தகரம் மற்றும் ஆஸ்பெஸ் டாஸ் சிமெண்ட் கூரை வீடுகள் கணக்கெடுப்புக்கு தகுதியான வீடுகளாகும். மண், சுடப்படாத செங்கல், மண் கலவையுடன் கூடிய கருங்கல், சிமெண்ட் பலகை போன்ற நிலைத்த தன்மையற்ற சுவர்களை கொண்ட ஓட்டு வீடுகளில், சுவர் நல்ல நிலையில் இல்லாத வீடுகளும் கணக்கெடுக்கப்படும். வாடகைக்கு வசிக்கும் குடும்பங்கள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்கள், ஊரக பகுதிகளில் இலவச வீட்டுமனை பட்டா பெற்று வீடு கட்ட இயலாத குடும்பங்கள் ஆகியவையும் கணக்கெடுக்கப்பட உள்ளது. கிராம ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி அளவிலான கூட்டமைப் பின் பிரதிநிதி ஆகிய 5 பேர் குழுவாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. கணக்கெடுப்பு குழுவுக்கான பயிற்சி ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை (7-ந்தேதி) முதல் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கணக்கெடுப்பு பணியை வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கணக்கெடுப்பை ஆய்வு செய்யும் பணியை வருகிற ஜனவரி மாதம் 9-ந்தேதிக்குள்ளும், கணக்கெடுப்புக்கான பட்டியலை இறுதி செய்யும் பணியை ஜனவரி 17-ந் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இறுதி செய்யப்பட்ட புதிய கணக்கெடுப்பு பட்டியல் ஜனவரி 18-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இது குறித்த தீர்மானத்தை வருகிற குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை சட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *