Skip to content
Home » அண்ணா பல்கலை.. செமஸ்டர் ரிசல்ட் நிறுத்திவைப்பு

அண்ணா பல்கலை.. செமஸ்டர் ரிசல்ட் நிறுத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 441 என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. என்ஜினீயரிங் 3, 5 மற்றும் 7-வது செமஸ்டர்களுக்கான தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அதற்கான தேர்வு முடிவை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. தேர்வு முடிவில், சில கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு வெளியாகாததால், அந்த மாணவ-மாணவிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு தொடர்பு கொண்டபோது தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரி தரப்பில் விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்து கொள்ளாதது, விடைத்தாள் திருத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் நிதி குறித்த கணக்குகளை முறையாக ஒப்படைக்காதது, தேர்வு கட்டணத்தை சரியான முறையில் செலுத்தாதது போன்ற காரணங்களுக்காக அந்த கல்லூரி மாணவ-மாணவிகளின் செமஸ்டர் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது.

கல்லூரிகள் செய்த தவறுக்காக மாணவர்களின் தேர்வு முடிவை நிறுத்தி வைப்பது என்ன நியாயம்? என்பது மாணவ-மாணவிகளின் கேள்வியாக இருந்தாலும், இதுபற்றி அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக சில கல்லூரிகள் ஆசிரியர்களை நியமனம் செய்வது இல்லை. இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஆவதோடு, மாணவ-மாணவிகளும் பாதிப்படைகிறார்கள். ஆகவே அனைத்து கல்லூரிஆசிரியர்களும் விடைத்தாள் திருத்துவதற்காக நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக தான் தற்போது தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில் 16 கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. விரைந்து தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், மாணவ-மாணவிகளின் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, வேறு காரணம் எதுவும் இல்லை. இதேபோல், விடைத்தாள் திருத்தும் பணிக்காக வழங்கப்படும் நிதி குறித்த கணக்கை ஒப்படைக்காததால், எங்களுக்கு கணக்கு தணிக்கையில் பிரச்சினை வருகிறது. அதை அந்த கல்லூரிகள்  விரைந்து வழங்க வேண்டும் என்பதற்காக சுமார் 15 கல்லூரிகளின் தேர்வு முடிவு நிறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பேற்று உரிய விளக்கம் கொடுத்ததும், தேர்வு முடிவு வெளியிடப்பட்டுவிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *