ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியினர் ஆக்கிரமித்து கட்டியிருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அமராவதி அருகே குண்டூரில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் .கட்சி மத்திய அலுவலகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இன்று காலை 5.30 மணிக்கு அலுவலகம் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதியில் குவிந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ஜெகன் மோகன் வீட்டின் முன்பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஜெகன் மோகன் வெளியிட்ட அறிக்கை: ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை மோசமான நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்தை புல்டோசர் கொண்டு ஒரு சர்வாதிகாரி இடித்துத் தள்ளி இருக்கிறார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டன. மாநிலத்தில் சட்டமும் நீதியும் முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. ஆந்திராவில் தேர்தலுக்குப் பிறகு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம். மக்களுக்காக கடுமையாக போராடுவோம். சந்திரபாபுவின் தவறான செயல்களை கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.