Skip to content
Home » சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது…

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கர்ப்பிணி சிறுமி ஒருவரை சிகிச்சைக்காக அவரது தாயார் அழைத்து வந்துள்ளார். 16 வயதே நிரம்பிய அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இந்த தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் நேரில் வந்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த சிறுமி சென்னையில் உறவினர் வீட்டில் இருந்தபோது சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த விஜயசங்கர் மகன் சரண் (வயது 24) என்பவரை காதலித்து வந்ததாகவும், இது குறித்து தனது தயாரிடம் தெரிவித்ததாகவும், அதன்பேரில் சரணை மயிலாடுதுறை வரவழைத்த தனது தாயார் கடந்த 11.9.2023 அன்று ஒரு கோவிலில் சரணுக்கும், தனக்கும் திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திருமணமான பின்பு சென்னையில் தனியாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், இந்த நிலையில் முதல் பிரசவம் என்பதால் தனது தாயார் மயிலாடுதுறைக்கு அழைத்து வந்ததாகவும் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் மற்றும் மகளிர் போலீசார் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சரணை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சரண் நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *