இந்திய தலைநகர் டில்லியின் வடக்கே, தில்ஷத் கார்டன் அருகில் உள்ளது சுந்தர் நாக்ரி பகுதி. அந்த சுற்று வட்டாரத்தில் வசிக்கும் பழ வியாபாரியான அப்துல் வாஜித் என்பவரின் மகன் முகம்மத் இஸார். முகம்மத், சற்று மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. முகம்மத் வெளியே சென்றிந்த போது காரணம் தெரியாமல் அவர் மீது சந்தேகப்பட்டு ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டுள்ளனர். ஆனால், அவருக்கு சரியாக பதிலளிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் சிலர் அவரை திருடன் என நினைத்து மரத்தில் கட்டி வைத்து கம்புகளால் தாக்கியுள்ளனர்.
வலி தாங்க முடியாமல் கத்தியும், இஸார் தாக்கப்பட்டார். அங்கு வந்திருந்த அவரது அண்டை வீட்டுக்காரர் ஒருவர், பலத்த காயமடைந்திருந்த இஸாரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அவர் இஸாரின் தந்தையிடம் நடந்த சம்பவத்தை குறித்து தெரிவித்து, அடித்தவர்களின் அடையாளங்களையும் கூறினார். காயங்களின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாகவே இஸார் உயிரிழந்தார். இதனையடுத்து, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையினர் கண்காணிப்பு கேமிராக்களின் மூலமும், அந்த நிகழ்ச்சியை படமாக்கிய ஒரு சிலரின் செல்போன் காட்சிகளின் மூலமாகவும் குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். “அவரது உடற்கூராய்வு அறிக்கை இன்று பெறப்படும்”, என டில்லி வடகிழக்கு பகுதியின் காவல்துறை துணை ஆணையர் ஜாய் டர்கி தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின் காரணமாக வேறு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இஸார் மீது நிகழ்ந்த இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.