வாலிபர் தற்கொலை…போலீசார் விசாரணைதிருச்சி மேல கல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத்.இவரது மகன் அஜய் (வயது 24) குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை கோபிநாத்தை பிரிந்து தாய் சகிலாவுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்தன்று அஜய் தனது நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது வீட்டிலிருந்த தாய் சகிலா குடித்து விட்டு ஏன் வந்தாய் என்று கேட்டு அஜயை சத்தம் போட்டதாக தெரிகிறது.இதில் கோபமடைந்த அஜய் தாய் சகிலாவை தாக்கியுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு தாய் சகிலா வேதாரண்யத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.இதனால் வீட்டில் தனியாக இருந்த அஜய் நேற்று அறையில் மின் கொக்கியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து வீட்டுக்கு வந்த தாய் சகிலா அஜய் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். இது குறித்து உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய அஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சகிலா பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் வியாபாரியிடம் செல்போன் பறிப்பு.. வாலிபர் கைது..
கரூர் மாவட்டம் குளித்தலை கே.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (வயது 42 )இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைப்பழம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மதுரை ரோடு பஸ் நிறுத்தம் நின்று சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பஸ்சில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இவர் அருகில் நின்ற ஒரு வாலிபர் தினகரன் சட்டை பாக்கெட்டில் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓட முயன்றார். இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வாலிபரிடம் விசாரணை செய்த போது அவர் அரியமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 31) என்பது தெரிய வந்தது, இதையடுத்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.
கட்டிட பொருட்களை திருடிய 2 சிறுவர்கள் கூர்நோக்கி இடத்தில் ஒப்படைப்பு…
திருச்சி ஏப்19 – சென்னையைச் சேர்ந்தவர் கணேஷ் ராஜா (வயது 26) இவர் திருச்சி தென்னூர் ஹை ரோடு பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பணிகளை முடித்துவிட்டு கட்டிடத்தை பூட்டிவிட்டு திருச்சியில் தங்கி உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று கட்டிடத்தை திறக்க வந்த பொழுது பூட்டி இருந்த கட்டிடம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கு இரண்டு சிறுவர்கள், ஒரு வாலிபர் என மூன்று பேர் அங்கு இருந்த கட்டிடப் பொருட்களை திருடிக் கொண்டிருப்பது பார்த்து அதிர்ச்சிடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு திருடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை கையும் களமாக பிடித்தனர்.
போலீசார் வருவதை தெரிந்து கொண்ட வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து தில்லை நகர் போலீசார் பிடிபட்ட இரண்டு சிறுவர்களை திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ 30 ஆயிரம் மதிப்புள்ள கட்டிடப் பொருட்களையும், ரூ 20 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளார்கள்.
மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருட்டு.. ஒருவர் கைது
திருச்சி ஏப் 19 – திருச்சி மாவட்டம் லால்குடி மாரியம்மன் கோவில் சேத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 70) இவர் நேற்று திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் அருகே காந்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த திருச்சி குழுமணி ரோடு பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மனைவி தங்கம்மாள் (55) என்பவர் கன்னியம்மாள் அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓட முயன்றார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தங்கம்மாளை பிடித்து காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கம்மாள்யை கைது செய்து அவரிடமிருந்து 2 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.