வாளுடன் பொதுமக்களுக்கு மிரட்டல்…
திருச்சி, அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ஆயில் மில் ரோடு இந்திரா நகர் அருகே ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் கையில் வாளை வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் கொண்டிருந்தார். உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பாரதியார் தெருவை சேர்ந்த பாதுஷா (22) என்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து ஆயுதத்தை பறிமுதல் செய்தனர்.
புத்தகக் கடையை உடைத்து பணம் கொள்ளை.. 3 சிறுவர்கள் கைது..
திருச்சி மேலப் புலிவார்டுரோடு தமிழ்ச் சங்கம் கட்டிடத்தில் புத்தக கடைகள் உள்ளது. இதில் முத்து மாணிக்கம் என்பவரது மகன் தியாகராஜன் ( 32) என்பவர் ஸ்டேஷனரி மற்றும் புத்தகக் கடை வைத்துள்ளார் .இவர் கடையை பூட்டிவிட்டு சம்பவத்தன்று வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் கடையை திறக்க வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணம் திருட்டு போனது தெரியவந்தது. உடனே இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது மூன்று சிறுவர்கள் கடையை உடைத்து திருடியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பட்டதாரி கணவன் தற்கொலை..
ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் புதுத் தெருவை சேர்ந்தவர் குருகிருஷ்ணன். ( 39) பட்டதாரி வாலிபர் .இவரது மனைவி கீர்த்தனா ( 38) திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவருக்கு சரியானை வேலை குரு கிருஷ்ணனுக்கு கிடைக்கவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி தனது குழந்தையுடன் வெளியில் சென்றிருந்தார். மனைவி இல்லாத நேரம் பார்த்து வீட்டில் குரு கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். பின்னர் மனைவி வந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து மனைவி கீர்த்தனா ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார் . இப்புகாரின் பேரில் எஸ்ஐ தீபிகா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடன் தொல்லை.. வாலிபர் தற்கொலை
திருச்சி ஜீவா நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் முத்துக்குமார். இவர் கடனால் கடந்த சிலநாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் முத்துக்குமார் வீட்டிற்கு வந்தார். அப்போது குடும்பத்தில் உள்ளவர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த முத்துக்குமார் வீட்டில் யாரும் இல்லாதபோது சமையல் அறையில் மனைவியின் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி மாலா கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.