அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (35) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவேல் அக்கம் பக்கம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மணிவேல் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி விசாரித்து வந்தனர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தில் இறவாங்குடி பிரிவு ரோட்டில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது அவர் அரியலூர் ரெட்டிக்குடிகாடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஏழுமலை (எ) சரவணன் (22) என்பதும், இருசக்கர வாகனத்தை திருடியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து சரவணனனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.